தலைவாழை: கிறிஸ்துமஸ் விருந்து - மீன் வறுவல்

தலைவாழை: கிறிஸ்துமஸ் விருந்து - மீன் வறுவல்
Updated on
1 min read

தொகுப்பு, படங்கள்: வி.சாமுவேல்

எப்போதும் எதற்காகவோ ஓடிக்கொண்டிருக்கும் வாழ்க்கையில் நம்மை நாமே உணரவும் ஆசுவாசப்படுத்திக்கொள்ளவும் வாய்ப்பாக அமைந்தவைதாம் பண்டிகைகள்.

ஒவ்வொரு பண்டிகைக்கும் ஒவ்வொரு காரணம் இருக்கும் என்றாலும் அனைத்துமே மகிழ்ச்சியையும் மனித நேயத்தையும் அன்பையும் அடிப்படையாகக் கொண்டவை. இயேசு கிறிஸ்துவின் பிறப்பைக் கொண்டாடும் வகையில் கொண்டாடப்படும் கிறிஸ்துமஸ் பண்டிகையும் அன்பையும் சமாதானத்தையும் பரப்பத் தவறுவதில்லை.

அவற்றுடன் சேர்த்து நாவூறச்செய்யும் பலகாரங்களையும் சேர்த்தே இந்தப் பண்டிகை நமக்குப் பரிசாகத் தருகிறது. கிறிஸ்துமஸ் நாளன்று செய்யக்கூடிய உணவு வகைகள் சிலவற்றைச் சமைக்கக் கற்றுத்தருகிறார் சென்னை ராயபுரத்தைச் சேர்ந்த வி. செல்வி.

மீன் வறுவல்

என்னென்ன தேவை?

சங்கரா மீன் - கால் கிலோ
மிளகாய்த் தூள் - 2 டீஸ்பூன்
பூண்டு - இரண்டு பல்
உப்பு, எண்ணெய் - தேவையான அளவு
மஞ்சள் தூள் - அரை டீஸ்பூன்
எலுமிச்சைச் சாறு - அரை மூடி
தயிர் - 2 டீஸ்பூன்

எப்படிச் செய்வது?

மீனைச் சுத்தம் செய்து துண்டுகள் போட்டுக்கொள்ளுங்கள். மீன் துண்டுகளுடன் மிளகாய்த் தூள், மஞ்சள் தூள், தயிர், நசுக்கிய பூண்டு, தேவையான அளவு உப்பு ஆகியவற்றைச் சேர்த்துப் பிசறிவைக்க வேண்டும். இதை 10 நிமிடங்கள் ஃப்ரிட்ஜில் வைக்க வேண்டும். பின்னர் வெளியே எடுத்துவைத்துச் சூடான தோசைக்கல்லில் போட்டு, சுற்றிலும் எண்ணெய் விட்டு மிதமான சூட்டில் வறுத்தெடுக்க வேண்டும். மேலே எலுமிச்சைச் சாறு பிழிந்து பரிமாறுங்கள்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in