

தொகுப்பு, படங்கள்: வி.சாமுவேல்
எப்போதும் எதற்காகவோ ஓடிக்கொண்டிருக்கும் வாழ்க்கையில் நம்மை நாமே உணரவும் ஆசுவாசப்படுத்திக்கொள்ளவும் வாய்ப்பாக அமைந்தவைதாம் பண்டிகைகள்.
ஒவ்வொரு பண்டிகைக்கும் ஒவ்வொரு காரணம் இருக்கும் என்றாலும் அனைத்துமே மகிழ்ச்சியையும் மனித நேயத்தையும் அன்பையும் அடிப்படையாகக் கொண்டவை. இயேசு கிறிஸ்துவின் பிறப்பைக் கொண்டாடும் வகையில் கொண்டாடப்படும் கிறிஸ்துமஸ் பண்டிகையும் அன்பையும் சமாதானத்தையும் பரப்பத் தவறுவதில்லை.
அவற்றுடன் சேர்த்து நாவூறச்செய்யும் பலகாரங்களையும் சேர்த்தே இந்தப் பண்டிகை நமக்குப் பரிசாகத் தருகிறது. கிறிஸ்துமஸ் நாளன்று செய்யக்கூடிய உணவு வகைகள் சிலவற்றைச் சமைக்கக் கற்றுத்தருகிறார் சென்னை ராயபுரத்தைச் சேர்ந்த வி. செல்வி.
தேங்காய் நெய் பிஸ்கட்
என்னென்ன தேவை?
சர்க்கரை - அரை கப்
ஏலக்காய் - 2
தேங்காய் - அரை மூடி
மைதா - ஒரு கப்
நெய் - அரை கப்
பேக்கிங் பவுடர் - அரை டீஸ்பூன்
பால் - தேவையான அளவு
எப்படிச் செய்வது?
முதலில் தேங்காயைத் துருவி அதை எண்ணெய்யில் வறுத்தெடுத்துக்கொள்ளுங்கள். வறுத்ததை மிக்ஸியில் போட்டு லேசாக அரைத்துக்கொள்ளுங்கள். சர்க்கரையுடன் ஏலக்காயைச் சேர்த்து அரைத்துக்கொள்ள வேண்டும். அதில் மைதா, தேங்காய்த் துருவல், காய்ச்சிய நெய், பேக்கிங் பவுடர் ஆகியவற்றைச் சேர்த்து நன்கு பிசைய வேண்டும். சிறிதளவு பால் சேர்த்து சப்பாத்தி மாவுபோல் பிசைய வேண்டும். பிசைந்த மாவைத் தேய்த்து, பிஸ்கெட் வடிவில் வெட்டிக்கொள்ள வேண்டும். இட்லித் தட்டில் நெய்யைத் தடவி இவற்றை அதில் அடுக்கி வேகவிட வேண்டும். 20 நிமிடங்கள் கழித்து எடுக்க வேண்டும்.