

தொகுப்பு: அன்பு
சுரைக்காய் போன்ற காய்களைச் சிலர் கூட்டுக்கு மட்டும்தான் பயன்படுத்துவார்கள். ஆனால், நீர்ச்சத்து அதிகமுள்ள சுரைக்காயில் இனிப்பு, காரம் எனப் பலவிதமான உணவைச் சமைக்க முடியும். அதுவும் குளிர்காலம் தொடங்கும் வேளையில் சுரைக்காயில் போளி, பக்கோடா, கேசரி, அடை போன்ற சுவையான பதார்த்தங்களைச் சமைத்து ருசிக்க உதவுகிறார் சேலம் மாவட்டம் மேட்டூர் அணைப் பகுதியைச் சேர்ந்த செ. கலைவாணி.
கேசரி
என்னென்ன தேவை?
சுரைக்காய்த் துருவல் – 1 கப்
வெல்லத் தூள் – முக்கால் கப்
முந்திரிப் பருப்பு – 5
ஏலக்காய்த் தூள், சுக்குத் தூள் – தலா 1 டீஸ்பூன்
நெய் – 6 டீஸ்பூன்
எப்படிச் செய்வது?
அடி கனமான வாணலியில் நெய்யை விட்டு அதில் முந்திரியை வறுத்தெடுத்துக்கொள்ளுங்கள். அந்த நெய்யிலேயே சுரைக்காய்த் துருவலைச் சேர்த்து நன்கு வதக்குங்கள். சுரைக்காய் வெந்ததும் வெல்லத் தூள், சுக்குத் தூள் இரண்டையும் சேர்த்து மிதமான தீயில் சுருள வதக்குங்கள். இறக்கும்போது வறுத்த முந்திரியைச் சேர்த்து ஏலக்காய்த் தூளைத் தூவிப் பரிமாறுங்கள்.