

என்னென்ன தேவை?
கறுப்பு கொண்டைக் கடலை - கால் கப்,
முள்ளங்கி, வாழைக்காய், கருணைக்கிழங்கு, பறங்கிக்காய், வெள்ளரிக்காய் (எல்லாம் சேர்த்து) - 2 கப்,
உப்பு - தேவைக்கு,
மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்,
துருவிய வெல்லம், நெய் - தலா 1 டேபிள் ஸ்பூன்
அரைக்க
கடுகு, மிளகு, தனியா, சீரகம் - தலா 1 டீஸ்பூன், பிரிஞ்சி இலை - 1 (சிறியது)
தாளிக்க
நெய் - 1 டீஸ்பூன், கடுகு, பெருங்காயம் - தலா அரை டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 2
மேலே தூவ
தேங்காய்த் துருவல் - 3 டேபிள் ஸ்பூன், உளுந்து வற்றல் - சிறிதளவு
எப்படிச் செய்வது?
உளுந்து வற்றல் செய்முறை:
ஒரு கப் உளுந்தை இரண்டு மணி நேரம் ஊறவைத்து வடிகட்டிக்கொள்ளுங்கள். அதனுடன் உப்பு சேர்த்து அரை யுங்கள். ஒரு கப் பூசணித் துருவலைத் துணியில் கட்டித் தொங்கவிடுங்கள். தண்ணீர் வடிந்ததும் அதை மிக்ஸியில் போட்டு அரைத்து அதனுடன் உளுந்து விழுது, ஒரு டீஸ்பூன் சீரகம், இஞ்சித் துருவல் ஆகியவற்றைச் சேர்த்துப் பிசையுங்கள். இதைச் சிறு சிறு உருண்டைகளாக உருட்டி வெயிலில் மூன்று நாட்கள் நன்றாகக் காயவைத்து எடுங்கள்.
கொண்டைக் கடலையை ஐந்து மணி நேரம் ஊறவையுங்கள். ஊறியதும் உப்பு சேர்த்து அரை வேக்காடு வேகவிட்டு தனியே வையுங்கள். அரைக்கக் கொடுத்தவற்றைச் சிறிதளவு தண்ணீர் ஊற்றி மையாக அரையுங்கள். வாணலியில் 1 டேபிள் ஸ்பூன் நெய் விட்டுக் காய்கறிகளைச் சேர்த்து வதக்குங்கள். அவற்றுடன் உப்பு, மஞ்சள் பொடி சேர்த்து சிறிதளவு தண்ணீர் ஊற்றி வேகவிடுங்கள்.
அரை வேக்காடு வெந்ததும் அரைத்துவைத்த விழுதை, கொண்டைக்கடலை, பொடித்த வெல்லம் ஆகியவற்றைச் சேர்த்து வேகவிடுங்கள். எல்லாம் நன்றாக வெந்ததும் தாளிக்கக் கொடுத்தவற்றைத் தாளித்துக் கொட்டுங்கள். எண்ணெய்யில் பொரித்த உளுந்து உருண்டை, தேங்காய்த் துருவல் இரண்டையும் மேலே தூவிப் பரிமாறுங்கள்.
குறிப்பு: ராஜகுமாரி | தொகுப்பு: ப்ரதிமா