

தொகுப்பு: ப்ரதிமா
காபி சமையல்
காபி பொடியை வைத்து என்ன செய்ய முடியும்? இதென்ன கேள்வி; சுடச் சுட அருமையான காபியைப் போட்டுக் குடிக்க முடியும் என்பதுதான் பெரும்பாலானோரின் பதிலாக இருக்கும். ஆனால், காபி பொடியில் விதவிதமான உணவு வகைகளைத் தயாரித்து ருசிக்கலாம் என்கின்றனர் நம் வாசகிகள். அவர்களில் பத்துப் பேரின் கைவண்ணத்தில் உருவான காபி ரெசிபியை நாம் படிப்பதுடன் சமைத்தும் ருசிப்போம். இவர்கள் அனைவரும் இன்ஸ்டண்ட் காபித் தூளைப் பயன்படுத்தியிருக்கிறார்கள்.
காபி சிக்கி
என்னென்ன தேவை?
பாதாம் – 5
பிஸ்தா – 10
வால்நட் – 5
திராட்சை – 10
சாக்லேட் பவுடர் – 2 டீஸ்பூன்
காபித் தூள் – 2 டீஸ்பூன்
பனை வெல்லம் – அரை கப்
நெய் – கால் கப்
எப்படிச் செய்வது?
கொட்டைகளைச் சிறு துண்டுகளாக நறுக்கிக்கொள்ளுங்கள். அதேபோல் திராட்சையையும் நறுக்கிக்கொள்ளுங்கள். பனை வெல்லத்தை நன்றாகக் காய்ச்சி வடிகட்டிக்கொள்ளுங்கள். வடிகட்டிய வெல்லத்தைப் பாகு பதம் வரும்வரைக்கும் கொதிக்கவிட்டுக் கெட்டியாக வந்ததும் சாக்லேட் பவுடர், காபித் தூள் இரண்டையும் அதில் சேர்த்துக் கலந்துகொள்ளுங்கள்.
இதனுடன் நறுக்கிய கொட்டை வகைகள், திராட்சை இரண்டையும் சேர்த்து நன்றாகக் கலந்துகொண்டே இருங்கள் அடிபிடிக்காமல் இருக்க சிறிதளவு நெய்விட்டுக் கிளறுங்கள். பாகு கெட்டியான பதத்துக்கு வந்ததும் ஒரு தட்டில் நெய் தடவிப் பாகை ஊற்றிச் சமமாகப் பரப்பிவிடுங்கள். மிதமான சூட்டில் வேண்டிய வடிவங்களில் துண்டுகளாகப் போட்டுப் பரிமாறுங்கள்.
- சீதா சம்பத்