

தொகுப்பு: ப்ரதிமா
காபி சமையல்
காபி பொடியை வைத்து என்ன செய்ய முடியும்? இதென்ன கேள்வி; சுடச் சுட அருமையான காபியைப் போட்டுக் குடிக்க முடியும் என்பதுதான் பெரும்பாலானோரின் பதிலாக இருக்கும். ஆனால், காபி பொடியில் விதவிதமான உணவு வகைகளைத் தயாரித்து ருசிக்கலாம் என்கின்றனர் நம் வாசகிகள். அவர்களில் பத்துப் பேரின் கைவண்ணத்தில் உருவான காபி ரெசிபியை நாம் படிப்பதுடன் சமைத்தும் ருசிப்போம். இவர்கள் அனைவரும் இன்ஸ்டண்ட் காபித் தூளைப் பயன்படுத்தியிருக்கிறார்கள்.
அத்தி காபி கேக்
என்னென்னத் தேவை?
பொரி அரிசி மாவு – அரை கப்
ஊறவைத்து அரைத்த
அத்திப்பழம் – 4 டீஸ்பூன்
சர்க்கரை – அரை கப்
நெய் – 2 டீஸ்பூன்
ஏலக்காய்த் தூள் – சிறிது
காபித் தூள் – அரை டீஸ்பூன்
எப்படிச் செய்வது?
அடி கனமான பாத்திரத்தில் சர்க்கரையுடன் முக்கால் கப் தண்ணீர் சேர்த்து கொதிக்கவிடுங்கள். சர்க்கரை நன்றாகக் கரைந்தவுடன் பொரி அரிசி மாவைச் சேர்த்து கட்டி தட்டாமல் நன்றாகக் கிளறிவிடுங்கள். இதனுடன் ஏலக்காய்த் தூளைச் சேருங்கள்.
அரிசி நன்றாக வெந்ததும் ஒரு டீஸ்பூன் நெய்விட்டுக் கிளறுங்கள். இப்போது பாதி அளவு கலவையை நெய் தடவிய தட்டில் கொட்டிப் பரப்பிவிடுங்கள். மீதியுள்ள கலவையில் அத்திப்பழ விழுது, காபித் தூள், ஒரு டீஸ்பூன் நெய் ஆகியவற்றைச் சேர்த்து நன்றாகக் கலந்துவிடுங்கள். இந்தக் கலவையை ஏற்கெனவே தட்டில் வைத்துள்ள கலவை மேல் பரப்பி விருப்பமான வடிவில் துண்டுகள் போட்டுப் பரிமாறுங்கள்.
- அ.யாழினி பர்வதம்