

தொகுப்பு: ப்ரதிமாதினமும்
விதவிதமாகவோ ஒரே மாதிரியாகவோ சாப்பிடும் வழக்கத்துக்கு இடையில் வாரத்தில் ஒரு நாளாவது எளிய உணவைச் சாப்பிடலாம். இதற்காகத்தான் பண்டிகை, விசேஷ நாட்களில் குறிப்பிட்ட சில விரதம் இருக்கும் முறையைப் பலரும் கடைப்பிடித்தனர். சமைக்காத உணவுக்கும் நாம் அடிக்கடி இடம் தரலாம். இதனால் ஆரோக்கியம் மேம்படுவதுடன் வழக்கமான உணவிலிருந்து விடுதலை பெறலாம். அடுப்பில்லாமல் செய்யக்கூடிய உணவு வகைகள் சிலவற்றின் செய்முறையை நம்முடன் பகிர்ந்துகொள்கிறார் கும்பகோணத்தைச் சேர்ந்த தாரகை.
காய்கறிக் கலவை
என்னென்ன தேவை?
பொடியாக அரிந்த பூசணித் துண்டுகள், வெள்ளரி, சுரைக்காய், பீர்க்கங்காய், கேரட், முட்டைகோஸ் - தலா 50 கிராம்
தேங்காய்த் துருவல் - கால் மூடி
எலுமிச்சைச் சாறு - அரை டீஸ்பூன்
மிளகுத்தூள் - ஒரு டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
பொடியாக நறுக்கிய மல்லித்தழை, கறிவேப்பிலை - சிறிதளவு
எப்படிச் செய்வது?
பொடியாக அரிந்த காய்கறிகளுடன் தேங்காய்த் துருவல், எலுமிச்சைச் சாறு, உப்பு, மிளகுத் தூள், கொத்தமல்லி, கறிவேப்பிலை ஆகியவற்றை ஒன்றாகக் கலந்து ஊறவைத்துப் பரிமாறுங்கள்.