

சுதா செல்வகுமார்
தொகுப்பு: ப்ரதிமா
மனிதர்கள் ஒன்றுகூடி மகிழ்வதற்காக உருவாக்கப்பட்டவைதான் பெரும்பாலான திருவிழாக்களும் பண்டிகைகளும். அந்த வகையில் பெண்கள் நட்பு பாராட்ட வாய்ப்பாக அமைந்த விழாவாகவும் நவராத்திரி கருதப்படுகிறது. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான படையலிட்டு அதை மற்றவர்களுக்கு அளிப்பது நவராத்திரியின் சிறப்பு. நவராத்திரி நாட்களில் கொலு வைத்தால்தான் பலகாரங்களைச் செய்ய வேண்டும் என்பதில்லை; அனைவரும் நாளுக்கு ஒன்றாகச் சமைக்கலாம் என்கிறார் சென்னை காரம்பாக்கத்தைச் சேர்ந்த சுதா செல்வகுமார். அவற்றில் சிலவற்றைச் சமைக்கவும் அவர் கற்றுத்தருகிறார்.
முந்தரி பாதாம் வடை
என்னென்ன தேவை?
முந்திரி, பாதாம் – தலா 50 கிராம்
துவரம் பருப்பு – 1 கப்
கடலைப் பருப்பு – கால் கப்
உடைத்த உளுந்து – 2 டேபிள் ஸ்பூன்
காய்ந்த மிளகாய் – 3
தேங்காய்த் துருவல் – 2 டேபிள் ஸ்பூன்
கறிவேப்பிலை, கொத்தமல்லி – சிறிதளவு
இஞ்சி – 1 டீஸ்பூன்
உப்பு, எண்ணெய் – தேவைக்கு
எப்படிச் செய்வது?
முந்திரி, பாதாம், துவரம் பருப்பு, கடலைப் பருப்பு ஆகியவற்றை ஒன்றாகக் கலந்து அரை மணி நேரம் ஊறவையுங்கள். உடைத்த உளுந்தைத் தனியாகக் கால் மணி நேரம் ஊறவையுங்கள். உளுந்தைத் தவிர்த்து மற்ற பருப்புகளுடன் காய்ந்த மிளகாயையும் உப்பையும் சேர்த்து அரைத்துக் கொள்ளுங்கள். தண்ணீர் சேர்க்கத் தேவையில்லை. ஊறவைத்த உளுந்து, நறுக்கிய கறிவேப்பிலை, கொத்தமல்லி, இஞ்சி, தேங்காய்த் துருவல் ஆகியவற்றை இந்த மாவில் சேர்த்துப் பிசைந்துகொள்ளுங்கள். பிசைந்த மாவை வடைகளாகத் தட்டி எண்ணெய்யில் போட்டுப் பொரித்தெடுங்கள்.