Published : 22 Sep 2019 10:44 AM
Last Updated : 22 Sep 2019 10:44 AM

தலைவாழை: தக்காளி சாட்

தொகுப்பு : ப்ரதிமா

தலைவாழை: தக்காளி சாட்

என்னென்ன தேவை?

தக்காளி – 4
கசகசா – 1 டீஸ்பூன்
முந்திரித் துண்டுகள் – 3 டேபிள் ஸ்பூன்
உருளைக் கிழங்கு – 2
எண்ணெய் – 3 டேபிள் ஸ்பூன்
எலுமிச்சைச் சாறு – 2 டேபிள் ஸ்பூன்
சாட் மசாலா – 1 டீஸ்பூன்
அரிந்த மல்லித்தழை – 4 டேபிள் ஸ்பூன்
கரம் மசாலா – 1 டீஸ்பூன்
நெய் – 2 டேபிள் ஸ்பூன்
வறுத்த சீரகத் தூள், இஞ்சித் துருவல், மிளகுத் தூள் – தலா 1 டீஸ்பூன்
மிளகாய்த் தூள் – 1 டேபிள் ஸ்பூன்
துருவிய வெல்லம் – 4 டேபிள் ஸ்பூன்
சக்கர் பாரா – சிறிதளவு
உப்பு – தேவைக்கு
சில்லி ஃப்ளேக்ஸ் – 1 டேபிள் ஸ்பூன்

எப்படிச் செய்வது?

கசகசா, முந்திரித் துண்டுகள், மிளகாய் வற்றல் ஆகியவற்றை மிக்ஸியில் போட்டுக் கொரகொரப்பாக அரைத்துக்கொள்ளுங்கள். அவற்றுடன் அரிந்த தக்காளியைச் சேர்த்து அரைத்துக்கொள்ளுங்கள். வாணலியில் எண்ணெய்விட்டுச் சூடானதும் அரைத்த விழுதைச் சேர்த்து வதக்கி அதனுடன் மிளகாய்த் தூள், கரம் மசாலா, உப்பு ஆகியவற்றைச் சேர்த்து வதக்கி, அரை கப் தண்ணீரை ஊற்றுங்கள். துருவிய வெல்லத்தைச் சேர்த்துக் கொதிக்கவிடுங்கள். தக்காளி வாசம் போனதும் இறக்கி வைத்துவிடுங்கள்.

உருளைக்கிழங்கில் உப்பு சேர்த்து வேகவைத்து மசித்து வைத்துக்கொள்ளுங்கள். அதனுடன் மல்லித்தழை, சாட் மசாலா, மிளகுத் தூள், பொடியாக துருவிய இஞ்சி சேர்த்து நன்றாக பிசைந்து கொள்ளுங்கள். உருளைக் கிழங்கை வடைபோல் தட்டி, தவாவில் போட்டுச் சுற்றிலும் எண்ணெய் ஊற்றி இரண்டு பக்கமும் நன்றாக வேகவைத்து எடுத்துக்கொள்ளுங்கள்.

இரண்டு தக்காளியைத் தண்ணீர் விடாமல் ஒன்றிரண்டாக அரைத்துக்கொள்ளுங்கள். அதை வெந்த உருளையில்
ஊற்றி, உப்பு, மல்லித்தழை, வறுத்த சீரகத் தூள் சிறிதளவு சேர்த்து மீண்டும் அனைத்தையும் சேர்த்து நன்றாக
கரண்டியால் மசித்துக்கொள்ளுங்கள்.

ஒரு தட்டில் அல்லது பாத்திரத்தில் உருளைக்கிழங்கு கலவையைப் போட்டு அதன்மேல் இரண்டு டீஸ்பூன் நெய், எலுமிச்சைச் சாறு, தயாரித்து வைத்துள்ள தக்காளிச் சாறு, சீரகத் தூள், சக்கர் பாரா ஆகியவற்றைச் சேர்த்து மல்லித்தழையைத் தூவிப் பரிமாறுங்கள். சக்கர் பாரா என்பது வட மாநிலங்களில் செய்யப்படும் ஒருவகை இனிப்பு.

சக்கர் பாரா செய்முறை

சர்க்கரை – 1 கப்
நெய் – 1 கப்
மைதா – 2 கப்
எண்ணெய் – தேவையான அளவு
ஒரு பாத்திரத்தில் அரை கப் தண்ணீர்விட்டுக் கொதித்ததும் சர்க்கரையைச் சேருங்கள். சர்க்கரை கரைந்ததும் அதனுடன் நெய் சேர்த்து ஒரு கொதி வந்ததும் இறக்கிவிடுங்கள். சூடு ஆறிய பிறகு அதனுடன் மைதாவைச் சேர்த்து சப்பாத்தி மாவுபோல் பிசைந்துகொள்ளுங்கள். இதைச் சற்றுத் தடிமனாகத் தேய்த்து பிடித்த வடிவில் சிறு சிறு துண்டுகளாகப் போட்டு எண்ணெய்யில் பொரித்தெடுங்கள். மிக்ஸர் செய்யும்போதும் இதைச் சேர்க்கலாம். மைதாவுக்குப் பதில் கோதுமையும் தண்ணீருக்குப் பதில் பாலும் சேர்க்கலாம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x