Published : 22 Sep 2019 10:44 AM
Last Updated : 22 Sep 2019 10:44 AM

தலைவாழை: உத்தராகண்ட் கத்தரி மசாலா

தொகுப்பு : ப்ரதிமா

அண்டை மாநிலங்களின் உணவு வகைகளை அடிக்கடி சமைக்கிறவர்கள்கூட நம்மிடமிருந்து தள்ளியிருக்கும் மத்திய, வட மாநில உணவைப் பற்றித் தெரிந்துகொள்ள ஆர்வம் காட்டுவதில்லை. வட இந்தியா முழுவதும் ரொட்டிதான் முதன்மை உணவு என்று பலர் நினைக்கிறார்கள்.

அங்கேயும் அரிசி, பருப்பு என நாம் பயன்படுத்துகிற பொருட்களை வைத்துச் சமைக்கிறார்கள். உத்தரப்பிரதேசத்திலிருந்து 2000-ல் பிரிக்கப்பட்டு இந்தியாவின் 27-ம் மாநிலமாக அறிவிக்கப்பட்ட உத்தராகண்ட் மாநிலத்திலும் அப்படித்தான் சமைக்கிறார்கள். அந்த மாநில உணவில் சிலவற்றைச் சமைக்கக் கற்றுத்தருகிறார் சென்னை போரூரைச் சேர்ந்த ராஜகுமாரி.

அச்சாரி சோலே புலாவ்

என்னென்ன தேவை?

பாசுமதி அரிசி – ஒன்றரை கப்
வெள்ளைக் கொண்டைக்கடலை – 1 கப்
தயிர் – அரை கப்
உப்பு – தேவைக்கு
இஞ்சி, பூண்டு விழுது – 1 டேபிள் ஸ்பூன்
நெய் – 2 டேபிள் ஸ்பூன்
மாங்காய் ஊறுகாய் – 1 டேபிள் ஸ்பூன்
அச்சாரி மசாலா தயாரிக்கத் தேவையானவை
சீரகம் – 1 டீஸ்பூன்
வெந்தயம், கடுகு, சோம்பு – தலா அரை டீஸ்பூன்
தனியா – 2 டீஸ்பூன்
கலோஞ்சி (வெங்காயம் விதைகள்) – 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் – 1 டீஸ்பூன்
மிளகாய்த் தூள் – 2 டேபிள் ஸ்பூன்
பெருங்காயம் – அரை டீஸ்பூன்

எப்படிச் செய்வது?

வெறும் வாணலியில் கடுகு, சீரகம், வெந்தயம், சோம்பு, தனியா, கலோஞ்சி ஆகியவற்றை ஒவ்வொன்றாகப் போட்டு வறுத்தெடுத்துக்கொள்ளுங்கள். ஆறிய பிறகு இவற்றை மிக்ஸியில் போட்டுக் கொரகொரப்பாக அரைத்துக்கொள்ளுங்கள். இவற்றுடன் மிளகாய்த் தூள், மஞ்சள் தூள், பெருங்காயம் ஆகியவற்றையும் சேர்த்துக் கலந்துவைத்துக்கொண்டால் அச்சாரி மசாலா தயார்.

வெள்ளைக் கொண்டைக்கடலையை ஊறவைத்து உப்புப் போட்டு வேகவைத்துக்கொள்ளுங்கள். பாசுமதி அரிசியைக் கழுவி ஒரு மணி நேரம் ஊறவையுங்கள். பிறகு, அடி கனமான வாணலியில் இரண்டு டேபிள் ஸ்பூன் நெய்விட்டுச் சூடானதும் இஞ்சி, பூண்டு விழுதையும் பொடித்து வைத்துள்ள அச்சாரி மசாலாவையும் சேர்த்து வதக்குங்கள். அரிசியைப் போட்டு ஒன்றரை கப் தண்ணீர் ஊற்றி உப்பு சேர்த்து வேகவிடுங்கள்.
அரிசி பாதி வெந்ததும் வேகவைத்த கடலை, தயிர், மாங்காய் ஊறுகாய் ஆகியவற்றைச் சேர்த்து வேகவிடுங்கள். எல்லாமாகச் சேர்ந்து சாதம் உதிரி உதிரியாக வந்ததும் இறக்கி வைத்து மல்லித்தழை தூவிப் பரிமாறுங்கள்.

Sign up to receive our newsletter in your inbox every day!

 
x