

தொகுப்பு: ப்ரதிமா
லேசாகத் தூறல் விழுந்தாலே சளிபிடித்துவிடுமோ எனச் சிலர் பதறுவார்கள். சத்துள்ள சரிவிகித உணவைச் சாப்பிட்டு உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொண்டால் மழையோ வெயிலோ நம்மை எதுவும் செய்யாது. பருவத்துக்கு ஏற்ற வகையிலும் உணவுப் பழக்கம் இருக்க வேண்டும் என்கிறார் சென்னை கே.கே நகரைச் சேர்ந்த சீதா சம்பத். மழைக்காலத்துக்கு உகந்த வகையில் மிளகு, தூதுவளை போன்றவற்றில் செய்யக்கூடிய உணவு வகைகளுடன் மாலை நேரத்தில் சூடாகச் சாப்பிட உகந்தவற்றையும் சமைக்கக் கற்றுத்தருகிறார் அவர்.
தூதுவளைத் துவையல்
என்னென்ன தேவை?
தூதுவளை – 1 கைப்பிடி
எண்ணெய் – 1 டீஸ்பூன்
மிளகாய் வற்றல் – 3
புளி – எலுமிச்சை அளவு
உப்பு – தேவைக்கு
உளுந்து, கடலைப் பருப்பு
– தலா 1 டீஸ்பூன்
பெருங்காயம் – சிறிய துண்டு
எப்படிச் செய்வது?
வாணலியில் சிறிதளவு எண்ணெய் விட்டுச் சூடானதும் மிளகாய் வற்றல், பெருங்காயம், உளுந்து, கடலைப் பருப்பு ஆகியவற்றைப் போட்டு வறுத்துதெடுத்து வைத்துக் கொள்ளுங்கள். அடுப்பில் சட்டி வைத்துச் சூடானதும் அடுப்பை அணைத்துவிட்டு அதில் தூதுவளையைப் போட்டுக் கிளறிவிடுங்கள். இதனுடன் வறுத்து வைத்துள்ள பொருட்கள், புளி, உப்பு ஆகியவற்றைச் சேர்த்து மையாக அரைத்தெடுங்கள். சூடான சாதத்தில் போட்டுச் சாப்பிட்டால் நாள்பட்ட இருமல், சளி போன்றவை நீங்கும்.
சீதா சம்பத்
படங்கள்: பு.க.பிரவீன்