

தொகுப்பு: ப்ரதிமா
லேசாகத் தூறல் விழுந்தாலே சளிபிடித்துவிடுமோ எனச் சிலர் பதறுவார்கள். சத்துள்ள சரிவிகித உணவைச் சாப்பிட்டு உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொண்டால் மழையோ வெயிலோ நம்மை எதுவும் செய்யாது. பருவத்துக்கு ஏற்ற வகையிலும் உணவுப் பழக்கம் இருக்க வேண்டும் என்கிறார் சென்னை கே.கே நகரைச் சேர்ந்த சீதா சம்பத். மழைக்காலத்துக்கு உகந்த வகையில் மிளகு, தூதுவளை போன்றவற்றில் செய்யக்கூடிய உணவு வகைகளுடன் மாலை நேரத்தில் சூடாகச் சாப்பிட உகந்தவற்றையும் சமைக்கக் கற்றுத்தருகிறார் அவர்.
அவல் கீரை கட்லெட்
என்னென்ன தேவை?
பாலக் கீரை பொடியாக நறுக்கியது – 1 கப்
அவல் – 1 கப்
பிரெட் துண்டுகள் – 3
அரிசி மாவு – 2 டீஸ்பூன்
புளித்த தயிர் – 4 டீஸ்பூன்
வெங்காயம் – 1
இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய் சேர்த்து அரைத்த விழுது – 1 டீஸ்பூன்
மிளகாய்த் தூள் – கால் டீஸ்பூன்
சாட் மசாலா – கால் டீஸ்பூன்
உப்பு – தேவைக்கு
எண்ணெய் – கால் கப்
எப்படிச் செய்வது?
அவலில் தண்ணீர் ஊற்றிப் பத்து நிமிடங்கள் ஊறவையுங்கள். அவல் நன்றாக ஊறியதும் தண்ணீரை வடித்து அதனுடன் பிரெட் துண்டுகளைச் சேர்த்து நன்றாகப் பிசைந்து கொள்ளுங்கள். அதில் பிரெட் தூள், அரிசி மாவு, பாலக் கீரை, இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய் ஆகியவற்றைச் சேர்த்து அரைத்த விழுது, உப்பு, மிளகாய்த் தூள், சாட் மசாலா ஆகியவற்றைச் சேர்த்து நன்றாகப் பிசையுங்கள். அதை விருப்பமான வடிவில் கொஞ்சம் தடிமனாகப் பிடித்து, சூடான தவாவில் பரவலாக எண்ணெய்விட்டுப் போடுங்கள். ஒரு புறம் வெந்ததும் திருப்பிப்போட்டு நன்றாக வேகவிட்டு எடுங்கள்.
சீதா சம்பத்
படங்கள்: பு.க.பிரவீன்