

தொகுப்பு: ப்ரதிமா
லேசாகத் தூறல் விழுந்தாலே சளிபிடித்துவிடுமோ எனச் சிலர் பதறுவார்கள். சத்துள்ள சரிவிகித உணவைச் சாப்பிட்டு உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொண்டால் மழையோ வெயிலோ நம்மை எதுவும் செய்யாது. பருவத்துக்கு ஏற்ற வகையிலும் உணவுப் பழக்கம் இருக்க வேண்டும் என்கிறார் சென்னை கே.கே நகரைச் சேர்ந்த சீதா சம்பத். மழைக்காலத்துக்கு உகந்த வகையில் மிளகு, தூதுவளை போன்றவற்றில் செய்யக்கூடிய உணவு வகைகளுடன் மாலை நேரத்தில் சூடாகச் சாப்பிட உகந்தவற்றையும் சமைக்கக் கற்றுத்தருகிறார் அவர்.
மிளகுக் குழம்புப் பொடி
என்னென்ன தேவை?
புளி – எலுமிச்சைப்பழ அளவு
உப்பு – தேவைக்கு
மிளகாய் வற்றல் - 2
மிளகு – 2 டீஸ்பூன்
உளுந்து, கடலைப் பருப்பு – தலா 2 டீஸ்பூன்
பெருங்காயம் – சிறிய கட்டி.
எப்படிச் செய்வது?
வெறும் வாணலியில் புளியைப் போட்டு சூடுபட வறுத்துக்கொள்ளுங்கள். புளியில் ஈரப்பதம் குறைந்ததும் அதனுடன் உப்புச் சேர்த்து கிளறி இறக்கிவைத்துவிடுங்கள். மீண்டும் வெறும் வாணலியில் மிளகாய் வற்றல், உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு, பெருங்காயம், மிளகு ஆகியவற்றைச் சேர்த்து வாசனை வரும்வரை வறுத்து எடுத்து ஆறவைத்துக்கொள்ளுங்கள். வறுத்த பொருட்கள் அனைத்தையும் மிக்ஸியில் போட்டுப் பொடித்துக்கொள்ளுங்கள்.
இந்தப் பொடியைக் காற்றுப் புகாத கண்ணாடி பாட்டிலில் போட்டு வைத்துக்கொள்ளுங்கள். மூன்று டீஸ்பூன் பொடியை ஒரு பாத்திரத்தில் போட்டு அதனுடன் முந்நூறு மில்லி தண்ணீர்விட்டுக் கொதிக்கவைத்து எடுத்தால் உடனடி மிளகுக் குழம்பு தயார். விரும்பினால் வேகவைத்த சேப்பங்கிழங்கை இதனுடன் சேர்த்துக்கொள்ளலாம்.
சீதா சம்பத்
படங்கள்: பு.க.பிரவீன்