

தொகுப்பு: ப்ரதிமா
லேசாகத் தூறல் விழுந்தாலே சளிபிடித்துவிடுமோ எனச் சிலர் பதறுவார்கள். சத்துள்ள சரிவிகித உணவைச் சாப்பிட்டு உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொண்டால் மழையோ வெயிலோ நம்மை எதுவும் செய்யாது. பருவத்துக்கு ஏற்ற வகையிலும் உணவுப் பழக்கம் இருக்க வேண்டும் என்கிறார் சென்னை கே.கே நகரைச் சேர்ந்த சீதா சம்பத். மழைக்காலத்துக்கு உகந்த வகையில் மிளகு, தூதுவளை போன்றவற்றில் செய்யக்கூடிய உணவு வகைகளுடன் மாலை நேரத்தில் சூடாகச் சாப்பிட உகந்தவற்றையும் சமைக்கக் கற்றுத்தருகிறார் அவர்.
மிளகு சூப்
என்னென்ன தேவை?
கொரகொரப்பாக
அரைத்த மிளகு – 1 டீஸ்பூன்
சுக்குப் பொடி – 1 டீஸ்பூன்
பூண்டுப் பல் – 3
தக்காளி – 1
மஞ்சள் தூள் - 1 சிட்டிகை
சின்ன வெங்காயம் – 2
கொத்தமல்லி, கறிவேப்பிலை – சிறிது
உப்பு – தேவைக்கு
நெய் – அரை டீஸ்பூன்
எப்படிச் செய்வது?
வாணலியில் நெய்விட்டுச் சூடானதும் அரிந்த வெங்காயத்தையும் நறுக்கிய பூண்டையும் போட்டு வதக்கிக்கொள்ளுங்கள். அதில் தக்காளி, மஞ்சள் தூள், மிளகுப் பொடி, சுக்குப் பொடி, கொத்தமல்லி, கறிவேப்பிலை, உப்பு ஆகியவற்றைப் போட்டு நன்றாக வதக்கிக்கொள்ளுங்கள். பின்னர் இரண்டு டம்ளர் தண்ணீர் ஊற்றிக் கொதிக்கவிடுங்கள். சூப் கலவை நன்றாக வெந்து ஒரு டம்ளர் அளவுக்குக் குறைந்ததும் அடுப்பை அணைத்து மூடிவிடுங்கள். பின்பு மிதமான சூட்டில் வடிகட்டிப் பருகுங்கள்.
சீதா சம்பத்
படங்கள்: பு.க.பிரவீன்