தலைவாழை: டோனட் (மூவண்ணத்திலும் ருசிக்கலாம்)

தலைவாழை: டோனட் (மூவண்ணத்திலும் ருசிக்கலாம்)
Updated on
1 min read

தொகுப்பு:ப்ரதிமா

ஆகஸ்ட் 15 அன்று பள்ளிகள் தொடங்கிப் பொது இடங்கள் வரை ஏற்றப்படும் மூவண்ணக்கொடியைப் பார்க்கும்போது பலருக்கும் வேற்றுமையில் ஒற்றுமை என்பதுதான் நினைவுக்கு வரும். ஒவ்வொரு நிறமும் ஒவ்வொன்றைக் குறிக்கும் என்றாலும் மொழி, மதம், இனம் எனப் பல்வேறுபட்ட மக்கள் இந்தியர்கள் என்ற புள்ளியில் ஒன்றிணைவதையும்தான் மூவண்ணம் உணர்த்துகிறது.

அதன் தொடர்ச்சியாக மூவண்ண உணவைச் சமைத்து ருசிப்பது நம்மைச் சுற்றியிருப்பவர்களோடு நல்லிணக்கத்தை உருவாக்குவதற்கான வாய்ப்பாக அமையக்கூடும் என்கிறார் சென்னை காரம்பாக்கத்தைச் சேர்ந்த சுதா செல்வகுமார். தினசரி உணவையே ஒருமைப்பாட்டுக்கான வழியாக மாற்றும் வகையில் சிலவற்றைச் சமைக்க அவர் கற்றுத்தருகிறார்.

டோனட்

என்னென்ன தேவை?

மைதா - 2 கப்
உலர்ந்த ஈஸ்ட் - 2 டீஸ்பூன்
சர்க்கரை - கால் கப்
உப்பு - ஒரு சிட்டிகை
எண்ணெய் – பொரிக்கத் தேவையான அளவு
வெதுவெதுப்பான பால் - மாவு பிசையத் தேவையான அளவு
வெண்ணெய் – சிறிது
ஐசிங் சுகர் கிரீம் - 3 டேபிள் ஸ்பூன்
ஃபுட் லிக்விட் (பச்சை, ஆரஞ்சு நிறங்களில்) – சிறிதளவு
சாக்லேட் சாஸ் (தேவையெனில்) - 3 டேபிள் ஸ்பூன்

எப்படிச் செய்வது?

பெரிய பாத்திரத்தில் பால், ஈஸ்ட், சர்க்கரை, உப்பு, வெண்ணெய் ஆகியவற்றைச் சேர்த்துக் கலக்கி, மைதா மாவுடன் சேர்த்துப் பிசையுங்கள். கெட்டியாகப் பிசைந்து இரண்டு மணி நேரம் மூடி வையுங்கள். பிறகு மாவைத் தடிமனான சப்பாத்தியாக இட்டு டோனட் கட்டரால் அழுத்தி எடுத்துக்கொள்ளுங்கள்.

ஒரு டிரேவில் சிறிது மாவைத் தூவி, வெட்டியெடுத்த டோனட்டை வைத்து மூடுங்கள். அரை மணி நேரம் கழித்து அவற்றைச் சூடான எண்ணெய்யில் போட்டுப் பொரித்தெடுங்கள்.

ஐசிங் சுகர் கிரீமை மூன்று பங்காகப் பிரித்து ஒன்றை அப்படியே ஒரு டோனட்டின் மேல்புறம் தடவுங்கள். இரண்டாம் பாகத்தில் பச்சை எசென்ஸைச் சேர்த்துக் கலக்கி அதை ஒரு டோனட்டில் தடவுங்கள். மீதமுள்ள கிரீமில் ஆரஞ்சு எசென்ஸைச் சேர்த்து கடைசி டோனட்டில் தடவுங்கள். விரும்பினால் டோனட்டின் கீழ்ப்புறம் சாக்லேட் சாஸ் தடவிப் பறிமாறுங்கள்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in