Published : 18 Aug 2019 10:23 AM
Last Updated : 18 Aug 2019 10:23 AM

தலைவாழை: பால் கேக் (மூவண்ணத்திலும் ருசிக்கலாம்)

தொகுப்பு:ப்ரதிமா

ஆகஸ்ட் 15 அன்று பள்ளிகள் தொடங்கிப் பொது இடங்கள் வரை ஏற்றப்படும் மூவண்ணக்கொடியைப் பார்க்கும்போது பலருக்கும் வேற்றுமையில் ஒற்றுமை என்பதுதான் நினைவுக்கு வரும். ஒவ்வொரு நிறமும் ஒவ்வொன்றைக் குறிக்கும் என்றாலும் மொழி, மதம், இனம் எனப் பல்வேறுபட்ட மக்கள் இந்தியர்கள் என்ற புள்ளியில் ஒன்றிணைவதையும்தான் மூவண்ணம் உணர்த்துகிறது.

அதன் தொடர்ச்சியாக மூவண்ண உணவைச் சமைத்து ருசிப்பது நம்மைச் சுற்றியிருப்பவர்களோடு நல்லிணக்கத்தை உருவாக்குவதற்கான வாய்ப்பாக அமையக்கூடும் என்கிறார் சென்னை காரம்பாக்கத்தைச் சேர்ந்த சுதா செல்வகுமார். தினசரி உணவையே ஒருமைப்பாட்டுக்கான வழியாக மாற்றும் வகையில் சிலவற்றைச் சமைக்க அவர் கற்றுத்தருகிறார்.

பால் கேக்

என்னென்ன தேவை?

பால் பவுடர் - ஒன்றறை கப்
மில்க் மெய்ட் - அரை கப்
பச்சை பிஸ்தா எசென்ஸ் - சில துளி
ஆரஞ்சு எசென்ஸ் - சில துளி
நெய் - 100 கிராம்
முந்திரிப் பொடி - 2 டேபிள் ஸ்பூன்
மைதா - 3 டேபிள் ஸ்பூன்

எப்படிச் செய்வது?

வாணலியில் நெய் விட்டுச் சூடானதும் அடுப்பைக் குறைந்த தணலில் வைத்து முந்திரிப் பொடியையும் பால் பவுடரையும் போட்டுக் கிளறுங்கள். அதில் மைதாவையும் மில்க் மெய்டையும் சேர்த்துக் கைவிடாமல் கட்டித் தட்டாமல் கிளறுங்கள். அனைத்தும் நன்றாக வெந்து சுருள் பதம் வந்ததும் அடுப்பை நிறுத்தி, கலவையை மூன்று பாகமாகப் பிரித்துக்கொள்ளுங்கள்.

ஒரு பங்கில் ஆரஞ்சு எசென்ஸும் மற்றொன்றில் பிஸ்தா எசென்ஸும் சேர்த்துக் கலந்துகொள்ளுங்கள். மூன்றாம் பங்கில் எந்த வண்ணமும் சேர்க்காமல் அப்படியே வையுங்கள். இவற்றை மூடி சிறிது நேரம் ஃப்ரிட்ஜில் வையுங்கள். பிறகு வெளியே எடுத்து, விருப்பமான வடிவத்தில் வெட்டியெடுத்துப் பறிமாறுங்கள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x