

தொகுப்பு : நிஷா
ஈடு இணையில்லா பக்ரீத் விருந்து
அன்புக்கு மதங்கள் கிடையாது என்பது அறுசுவை உணவுக்கும் பொருந்தும். மதங்களைக் கடந்து மனிதர்களிடையே நட்புறவை மேம்படுத்துவதுதான் பண்டிகைகளின் நோக்கம். பண்டிகைகள் அன்று நம் வீட்டில் விதவிதமாகச் சமைத்து ருசிப்பதுடன் அதை நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் தந்து மகிழ்வது அலாதியானது. பக்ரீத் அன்று செய்யக்கூடிய உணவு வகைகள் சிலவற்றைச் சமைக்கக் கற்றுத்தருகிறார் சென்னையைச் சேர்ந்த ரஷிதா. அவற்றைச் சமைத்து, ருசித்து மகிழ்வோம்.
வட்டலப்பம்
என்னென்ன தேவை?
முட்டை – 10
தேங்காய் – 1
சர்க்கரை – 200 கிராம்
ஏலக்காய் – 5
நெய் – 50 கிராம்
முந்திரி, பாதாம், வால்நட் – 1 கப்
எப்படிச் செய்வது?
முட்டையை உடைத்து மிக்ஸியில் நன்றாக அடித்து எடுத்து வைத்துக்கொள்ளுங்கள். தேங்காயைத் துருவி அதனுடன் சிறிதளவு தண்ணீர் ஊற்றி மிக்ஸியில் அடித்துக் கெட்டியாக ஒரு டம்ளர் தேங்காய்ப் பாலை எடுத்துக்கொள்ளுங்கள். சர்க்கரையுடன் ஏலக்காயைச் சேர்த்து மிக்ஸியில் மாவாகப் பொடித்துக்கொள்ளுங்கள். அதேபோல் பருப்பு வகைகளையும் பொடித்துக்கொள்ளுங்கள். இவை அனைத்தையும் ஒன்றாகச் சேர்த்து அகன்ற பாத்திரத்தில் மாற்றிக்கொள்ளுங்கள்.
குக்கரில் தண்ணீர் ஊற்றிச் சூடானதும் அதன் மேல் பருப்புக் கலவைப் பாத்திரத்தை வைத்து மூடிவிடுங்கள். முதல் விசில் வந்தவுடன் தீயைக் குறைத்து 15 நிமிடங்கள் வேகவிட்டு அடுப்பை அணைத்துவிடுங்கள். நெய் தடவிய தட்டில் குக்கரில் உள்ள கலவையை ஊற்றி ஆறவைத்து, சிறு துண்டுகளாக வெட்டிப் பரிமாறுங்கள்.