Published : 11 Aug 2019 09:54 AM
Last Updated : 11 Aug 2019 09:54 AM

தலைவாழை: தக்கடி 

ஈடு இணையில்லா பக்ரீத் விருந்து

தொகுப்பு : நிஷா

அன்புக்கு மதங்கள் கிடையாது என்பது அறுசுவை உணவுக்கும் பொருந்தும். மதங்களைக் கடந்து மனிதர்களிடையே நட்புறவை மேம்படுத்துவதுதான் பண்டிகைகளின் நோக்கம். பண்டிகைகள் அன்று நம் வீட்டில் விதவிதமாகச் சமைத்து ருசிப்பதுடன் அதை நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் தந்து மகிழ்வது அலாதியானது. பக்ரீத் அன்று செய்யக்கூடிய உணவு வகைகள் சிலவற்றைச் சமைக்கக் கற்றுத்தருகிறார் சென்னையைச் சேர்ந்த ரஷிதா. அவற்றைச் சமைத்து, ருசித்து மகிழ்வோம்.

தக்கடி

என்னென்ன தேவை?

பச்சரிசி – 1 கப்
தேங்காய் – 1
வெங்காயம் – கால் கிலோ
பச்சை மிளகாய் – 5
புதினா, மல்லித்தழை – தலா அரை கப்
உப்பு – தேவைக்கு
சால்னாவுக்கு
மட்டன் – கால் கிலோ
இஞ்சி - பூண்டு விழுது – 5 டீஸ்பூன்
பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம் – 2
பொடியாக நறுக்கிய தக்காளி – கால் கிலோ
மிளகாய் – 5
மல்லித் தழை, புதினா – அரை கப்
மிளகாய்த் தூள்– 1 டீஸ்பூன்
கறி மசாலாத் தூள் - 150 கிராம்
பட்டை – 1
ஏலக்காய், கிராம்பு – தலா 4
எண்ணெய் – 100 மி.லி.

எப்படிச் செய்வது?

பச்சரிசியை ஒரு மணி நேரம் ஊறவைத்துப் பின் தண்ணீரை வடிகட்டி நிழலில் காயவைத்து, மாவாக அரைத்துக்கொள்ளுங்கள். அடி கனமான வாணலியில் பச்சரிசி மாவைப் போட்டு வறுத்துக்கொள்ளுங்கள். துருவிய தேங்காயை அதில் சேர்த்து நன்கு வறுத்தெடுத்து வைத்துக்கொள்ளுங்கள். இதனுடன் மெலிதாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், புதினா, மல்லித் தழை, உப்பு சேர்த்து நன்றாகக் கலந்துகொள்ளுங்கள்.
சால்னாவுக்குக் கறியைத் தயிருடன் கலந்து அரை மணி நேரம் ஊறவைத்துக்கொள்ளுங்கள்.

அடி கனமான பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றிச் சூடானதும் பட்டை, கிராம்பு, ஏலக்காய் ஆகியவற்றைப் போட்டுத் தாளியுங்கள். பிறகு நறுக்கிய வெங்காயத்தைச் சேர்த்து வதக்கிக்கொள்ளுங்கள். அதனுடன் தக்காளி, பச்சை மிளகாய், இஞ்சி-பூண்டு விழுது ஆகியவற்றைச் சேர்த்து நன்றாக வதக்கிக்கொள்ளுங்கள். ஊறவைத்துள்ள கறியைப் போட்டு, தேவையான அளவு உப்பு சேர்த்துப் பத்து நிமிடங்கள் நன்றாக வதக்குங்கள்.

பின்னர் மிளகாய்த் தூளையும் கறி மசாலாத் தூளையும் சேர்த்துக் கிளறி மூன்று லிட்டர் தண்ணீர் ஊற்றி நன்றாகக் கொதிக்கவிடுங்கள். கறி வெந்ததும் சால்னாவை மட்டும் பிசைந்து வைத்துள்ள பச்சரிசி மாவுடன் கலந்து பெரிய உருண்டைகளாகப் பிடித்துக்கொள்ளுங்கள். இரண்டு உருண்டைகளைத் தனியே வைத்துவிட்டு மற்ற உருண்டைகளைச் சால்னாவில் போட்டு வேகவிடுங்கள்.

மாவு வெந்ததும் மேலே வரும். அவற்றை எடுத்து வைத்துவிடுங்கள். பிறகு இரண்டு உருண்டைகளை மட்டும் வெந்நீரில் கரைத்துச் சால்னாவில் சேர்த்துக் கொதிக்கவிடுங்கள். 20 நிமிடங்கள் கழித்து மல்லி, புதினா தூவி இறக்கினால் வித்தியாசமான தக்கடி ரெடி.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x