

தொகுப்பு: ப்ரதிமா
விதைகள் எல்லாம் விதைக்கத்தான் எனப் பலரும் நினைத்திருப்போம். சிலர் பூசணி, வெள்ளரி போன்ற தேர்ந்தெடுத்த சில வகை விதைகளை மட்டும் சமையலில் சேர்த்துக்கொள்வார்கள். ஆனால், பல வகை விதைகளில் விதவிதமாகச் சமைத்து ருசிக்கலாம் என்கிறார் சென்னை காரம்பாக்கத்தைச் சேர்ந்த சுதா செல்வகுமார். சில விதை உணவு வகைகளைச் சமைக்கவும் அவர் கற்றுத்தருகிறார்.
தாமரை விதை கீர்
என்னென்ன தேவை?
தாமரை விதை - அரை கப்
பால் - 2 கப்
மில்க் மெய்டு - கால் கப்
ஏலக்காய்ப் பொடி - 1 டீஸ்பூன்
வெள்ளரி விதை - 1 டீஸ்பூன்
நெய் - சிறிதளவு
குங்குமப் பூ - ஒரு சிட்டிகை
எப்படிச் செய்வது?
தாமரை விதையைத் தண்ணீரில் பத்து நிமிடங்கள் ஊறவைத்துக்கொள்ளுங்கள். அடி கனமான வாணலியில் பால் ஊற்றிக் கொதித்ததும் குறைந்த தணலில் வைத்து ஏலக்காய்ப் பொடியையும் ஊறவைத்த தாமரை விதையையும் சேருங்கள். தாமரை விதை வெந்ததும் மில்க் மெய்டு சேர்த்துக் கிளறிவிடுங்கள். நன்றாகக் கொதித்ததும் குங்குமப்பூவைத் தூவி அடுப்பை அணைத்துவிடுங்கள். நெய்யில் வெள்ளரி விதையை வறுத்துத் தாமரை விதை கீரின் மேலே தூவிப் பரிமாறுங்கள்.