தலைவாழை: விதவிதமா விதை உணவு - சியா விதை பர்பி
தொகுப்பு: ப்ரதிமா
விதைகள் எல்லாம் விதைக்கத்தான் எனப் பலரும் நினைத்திருப்போம். சிலர் பூசணி, வெள்ளரி போன்ற தேர்ந்தெடுத்த சில வகை விதைகளை மட்டும் சமையலில் சேர்த்துக்கொள்வார்கள். ஆனால், பல வகை விதைகளில் விதவிதமாகச் சமைத்து ருசிக்கலாம் என்கிறார் சென்னை காரம்பாக்கத்தைச் சேர்ந்த சுதா செல்வகுமார். சில விதை உணவு வகைகளைச் சமைக்கவும் அவர் கற்றுத்தருகிறார்.
சியா விதை பர்பி
என்னென்ன தேவை?
சியா விதை - 1 கப்
விதை நீக்கிய பேரீச்சை - அரை கப்
செர்ரி பழம் - அலங்கரிக்கத் தேவையான அளவு
நாட்டுச் சர்க்கரை - 2 டேபிள் ஸ்பூன்
தேங்காய்த் துருவல் - 3 டேபிள் ஸ்பூன்
நெய் - தேவைக்கு
ஏலக்காய்ப் பொடி - ஒரு சிட்டிகை
பாதாம் பொடி - 2 டேபிள் ஸ்பூன்
எப்படிச் செய்வது ?
வெறும் வாணலியில் சியா விதையை வறுத்தெடுத்துக்கொள்ளுங்கள். பேரீச்சையை வெதுவெதுப்பான நீரில் ஒரு மணி நேரம் ஊறவைத்து, நீரை வடித்து மிக்ஸியில் மையாக அரைத்துக்கொள்ளுங்கள். பேரீச்சை விழுதை வாணலியில் போட்டுச் சுருளாக வதக்குங்கள்.
அதில் தேங்காய்த் துருவல், சியா விதை, நாட்டுச் சர்க்கரை, ஏலக்காய்ப் பொடி, பாதாம் பொடி ஆகியவற்றைச் சேர்த்து, சிறிதளவு நெய்விட்டு நன்றாகக் கிளறி விடுங்கள். கெட்டியான பதம் வந்ததும் வெண்ணெய் தடவிய தட்டில் இதைக் கொட்டி ஆறவிடுங்கள். கலவை ஆறியதும் குளிர்சாதனப் பெட்டியில் 15 நிமிடங்கள் வைத்து எடுத்து விருப்பமான வடிவில் வெட்டிப் பரிமாறுங்கள்.
