

காலை ஆறு மணிக்கே தன் வேலையைத் தொடங்கிவிடுகிற வெயிலைச் சபிக்காதவர்கள் குறைவு. உக்கிரமாகக் காயும் வெயிலை வசைபாடுவதைவிட, நம் சமையலுக்கான ஆதாரசக்தியாக அதைப் பயன்படுத்தலாம். ஊறுகாய், வடாம் வகைகளைச் செய்வதற்காகவே வருடம்தோறும் தகிக்கிற இந்த வெயிலை எப்படி வீணாக்க முடியும்? கோடை காலத்தில் நாம் தயாரிக்கும் இந்த உணவுப் பொருட்கள் வருடம் முழுமைக்கும் கைகொடுத்து உதவும் என்று வெயிலுக்கு ஆதரவு தருகிறார் சென்னை கிழக்கு முகப்பேரைச் சேர்ந்த வரலட்சுமி முத்துசாமி. வாருங்கள் வடாம், ஊறுகாய் வகைகளைச் செய்து நாமும் வெயிலைக் கொண்டாடுவோம்.
ஆவக்காய்
என்னென்ன தேவை?
மாங்காய் - 6
மிளகாய்த் தூள் - 4 டீஸ்பூன்
கடுகுத் தூள், வெந்தயம் - தலா 2 டீஸ்பூன்
பெருங்காயப் பொடி - 1 டீஸ்பூன்
உப்பு, நல்லெண்ணெய் - தேவையான அளவு
எப்படிச் செய்வது?
மாங்காய்களை நன்றாகக் கழுவி, துடைக்கவும். அவற்றைக் கொட்டையுடன் நான்கு அல்லது ஐந்து துண்டுகளாக நறுக்கவும். மாங்காய்த் துண்டுகளுடன் மிளகாய்த் தூள், கடுகுத் தூள், உப்பு, வெந்தயம், பெருங்காயப் பொடி சேர்த்துக் குலுக்கவும். துண்டுகளுக்கு மேல் நிற்கும்வரை நல்லெண்ணெய் விடவும். நான்கு நாட்கள் கழித்துப் பயன்படுத்தலாம். விரும்பினால் கொண்டைக்கடலையை ஊறவைத்து, தண்ணீரை வடித்து இதில் சேர்க்கலாம்.