Last Updated : 30 Jun, 2019 11:26 AM

 

Published : 30 Jun 2019 11:26 AM
Last Updated : 30 Jun 2019 11:26 AM

தலைவாழை: சுவையான சுரைக்காய் பராத்தா

நீர்ச்சத்து நிறைந்திருக்கும் சுரைக்காய் வெயிலுக்கு உகந்தது. ஆனால், சுரைக்காயைச் சாப்பிட்டால் சளி பிடித்துவிடும் என்று தவறாக நினைத்து பலரும் சுரைக்காயைத் தவிர்த்துவிடுகிறார்கள். உண்மையில் பல்வேறு சத்துகள் நிறைந்தது சுரைக்காய். இதய ஆரோக்கியத்துக்குச் சுரைக்காய் உதவுவதாகச் சொல்கிறார்கள். வைட்டமின் சத்துக்கள் நிறைந்திருக்கும் சுரைக்காய், உடல் சூட்டைத் தணிக்கும். சுரைக்காயில் செய்யக்கூடிய உணவு வகைகள் சிலவற்றைச் சமைக்கக் கற்றுத்தருகிறார் கோயம்புத்தூரைச் சேர்ந்த ராதா.

சுரைக்காய் பராத்தா

என்னென்ன தேவை?

சுரைக்காய் – 1 (சிறியது)

வெங்காயம், உருளைக் கிழங்கு – தலா 1

கொத்தமல்லித்தழை – சிறிதளவு

உப்பு, எண்ணெய், நெய் – தேவையான அளவு

ஓமம், சீரகம் – தலா அரை டீஸ்பூன்

மிளகாய்த் தூள் - அரை டீஸ்பூன்

எப்படிச் செய்வது?

சுரைக்காயைத் தோல்சீவித் துருவிப் பிழிந்து வைத்துக்கொள்ளுங்கள். உருளைக் கிழங்கை வேகவைத்துத் தோலுரித்துப் பிசைந்துகொள்ளுங்கள். வாணலியில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி ஓமம், சீரகம் இரண்டையும் போட்டுத் தாளித்து வெங்காயத்தைச் சேர்த்து வதக்கி, உப்பு, மஞ்சள் தூள், மிளகாய்த் தூள் ஆகியவற்றைச் சேர்த்து வதக்குங்கள். துருவிய சுரைக்காயையும் உருளைக் கிழங்கையும் சேர்த்து வதக்கி இறக்கிவையுங்கள்.

கோதுமை மாவைச் சிறிதளவு உப்பு சேர்த்து சப்பாத்தி மாவு பதத்துக்குப் பிசைந்து அரை மணி நேரம் ஊறவையுங்கள். பிறகு மாவைச் சிறிது எடுத்து வட்டமாகத் தேய்த்து, வதக்கிவைத்திருக்கும் பூரணத்தில் சிறிது உள்ளே வைத்து மூடி பராத்தாவாகத் தேய்த்துக்கொள்ளுங்கள். மெலிதாக இல்லாமல் சற்றுக் கனமாகத் தேய்த்துக்கொள்ளுங்கள். இதைத் தோசைக்கல்லில் போட்டுச் சுற்றிலும் நெய் ஊற்றி திருப்பிப் போட்டுச் சிவந்ததும் எடுங்கள். நீர்க்காயான சுரைக்காயை வெயில் காலத்தில் நிறையச் சாப்பிடுவது நல்லது. தயிர் பச்சடியுடனோ உங்களுக்குப் பிடித்த தொடுகறியுடனோ சாப்பிடலாம்.

இளநீர்த் தோசை

என்னென்ன தேவை?

பச்சரிசி – 4 கப்

தேங்காய்த் துருவல் – அரை கப்

உப்பு – தேவையான அளவு

இளநீர் – 1 கப்

எப்படிச் செய்வது?

அரிசியை நான்கு மணி நேரம் ஊறவையுங்கள். ஊறிய அரிசியுடன் தேங்காய்த் துருவல், இளநீர், தேவையான அளவு உப்பு ஆகியவற்றைச் சேர்த்து நன்றாக அரையுங்கள். மாவை நீர்க்கக் கரைத்து ரவா தோசைபோல் ஊற்றுங்கள். சுற்றிலும் எண்ணெய் விட்டு நன்றாக வெந்ததும் எடுங்கள். தக்காளி சட்னி, வெங்காய சட்னி, சாம்பார் ஆகியவற்றுடன் தொட்டுச் சாப்பிடலாம்.

சட்னி

என்னென்ன தேவை?

காய்ந்த மிளகாய் – 3

உளுந்து, கடலைப் பருப்பு – தலா 2 டீஸ்பூன்

தேங்காய்த் துருவல் – 1 கப்

வெங்காயம் – 1

தக்காளி – 1

கறிவேப்பிலை – சிறிதளவு

எப்படிச் செய்வது?

வாணலியில் சிறிதளவு எண்ணெய் ஊற்றிக் கடலைப் பருப்பையும் உளுந்தையும் போட்டுத் தாளித்துக்கொள்ளுங்கள். பிறகு வரமிளகாய், வெங்காயம், கறிவேப்பிலை, தக்காளி, தேவையான அளவு உப்பு, தேங்காய்த் துருவல் ஆகியவற்றைச் சேர்த்து நன்றாக வதக்கி ஆறவையுங்கள். கலவை நன்றாக ஆறியதும் மிக்ஸியில் போட்டு மையாக அரைத்தெடுத்துப் பரிமாறுங்கள்.

ஆலு மட்டர் மசாலா

என்னென்ன தேவை?

உருளைக் கிழங்கு – 4

பட்டாணி – 1 கப்

தக்காளி, வெங்காயம் – தலா 2

இஞ்சி – சிறு துண்டு

பூண்டு – 5 பல்

பச்சை மிளகாய் – 2

எண்ணெய், உப்பு – தேவைக்கு

சீரகம், மசாலாத் தூள், மல்லித் தூள், ஏலக்காய்த் தூள் - தலா 1 டீஸ்பூன்

பாதாம் – 10

பால் – 4 டீஸ்பூன்

எப்படிச் செய்வது?

உருளைக் கிழங்கை வேகவைத்துத் தோலுரித்துக்கொள்ளுங்கள். வெங்காயத்தையும் தக்காளியையும் சிறிது எண்ணெய் ஊற்றி வதக்கி அரைத்துக்கொள்ளுங்கள். இஞ்சி, பூண்டு இரண்டையும் சேர்த்து விழுதாக அரைத்துக்கொள்ளுங்கள். பாதம் பருப்பில் பால் ஊற்றி அரைத்துவையுங்கள். பட்டாணியை வேகவைத்துக்கொள்ளுங்கள்.

வாணலியில் எண்ணெய் ஊற்றி, சீரகம் போட்டுத் தாளியுங்கள். இஞ்சி – பூண்டு விழுது, வெங்காயம் – தக்காளி விழுது இரண்டையும் சேர்த்து நன்றாக வதக்குங்கள். மஞ்சள் தூள், மசாலாத் தூள், மல்லித் தூள், பச்சை மிளகாய் ஆகியவற்றைச் சேர்த்து வதக்குங்கள். உருளைக் கிழங்கு, வேகவைத்த பட்டாணி, பாதாம் விழுது ஆகியவற்றைச் சேர்த்துக் கலக்கி, தேவையான அளவு உப்பு சேர்த்துக் கொதிக்கவிடுங்கள். நன்றாகக் கலந்துவந்ததும் ஏலக்காய்த் தூளைச் சேர்த்து, கொத்தமல்லித்தழையைத் தூவி இறக்கிவையுங்கள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x