Published : 13 Aug 2017 01:27 PM
Last Updated : 13 Aug 2017 01:27 PM
தென்னிந்தியாவில் கிருஷ்ண ஜெயந்தியாகக் கொண்டாடப்படும் கண்ணனின் பிறந்தநாள், வட இந்தியாவில் ஜன்மாஷ்டமியாகக் கொண்டாடப்படுகிறது. சீடையும் முறுக்கும் கண்ணனுக்கு மட்டுமல்ல; குழந்தைகள் முதல் பெரியவர்கள்வரை அனைவருக்கும் பிடிக்கும். ஒவ்வோர் ஆண்டும் ஒரே மாதிரி பலகாரங்களைச் செய்து சலித்துப்போனவர்களுக்காகப் புதுவகை செய்முறை தருகிறார் சென்னை கோடம்பாக்கத்தைச் சேர்ந்த லட்சுமி சீனிவாசன். ஒரே நாளில் அனைத்தையும் செய்ய முடியாதவர்கள் ஒவ்வொரு நாளும் ஒவ்வொன்றாகச் சமைத்து ருசியுங்கள்.
வெண்ணெய் முறுக்கு
என்னென்ன தேவை?
பச்சரிசி மாவு - 200 கிராம்
பாசிப் பருப்பு - 100 கிராம்
ஓமம், வெள்ளை எள், சீரகம்
- தலா அரை டீ ஸ்பூன்
பெருங்காயத் தூள் - ஒரு சிட்டிகை
உப்பு - தேவையான அளவு
வெண்ணெய் - ஒரு டீ ஸ்பூன்
காய்ச்சிய எண்ணெய் - ஒரு டீ ஸ்பூன்
எண்ணெய் - தேவையான அளவு
எப்படிச் செய்வது?
பச்சரியைக் காயவைத்து அரைத்துக்கொள்ளுங்கள். வெறும் வாணலியில் பாசிப் பருப்பை மிதமான சூட்டில் சிவக்க வறுத்துக்கொள்ளுங்கள். ஆறவைத்துப் பொடித்துச் சலியுங்கள். அரிசி மாவு, பாசிப் பருப்பு மாவு, உப்பு, பெருங்காயத் தூள், சீரகம், ஓமம், வெள்ளை எள், சூடான எண்ணெய் ஆகியவற்றை ஒன்றாகச் சேர்த்துப் பிசையுங்கள். தேவையான அளவு தண்ணீர் தெளித்து நன்றாகப் பிசையுங்கள்.
பிசைந்த மாவை எண்ணெய் தடவிய முள் முறுக்கு அச்சில் நிரப்பி, சூடான எண்ணெயில் மிதமான சூட்டில் பொன்னிறமாகப் பொரித்தெடுங்கள்.
வேர்க்கடலை வெல்லச் சீடை
என்னென்ன தேவை?
பாகு வெல்லம் - ஒரு கப்
வேர்க்கடலை (பொடித்தது) - கால் கப்
வறுத்து அரைத்த உளுந்து மாவு
- ஒரு டீ ஸ்பூன்
பச்சரிசி மாவு - 300 கிராம்
ஏலக்காய்ப் பொடி - சிறிது
நெய் - ஒரு டீ ஸ்பூன்
வெள்ளை எள் - ஒரு டீ ஸ்பூன்
பொரிக்க நெய் - 100 கிராம்,
எண்ணெய் - 200 கிராம்
வறுத்த தேங்காய்ப் பல்
- ஒரு டீ ஸ்பூன்
வெண்ணெய்
- ஒரு டீ ஸ்பூன்
எப்படிச் செய்வது?
பச்சரிசி மாவைக் கைபொறுக்கும் சூட்டில் வெறும் வாணலியில் வறுத்து ஆறவிடுங்கள். உளுந்து மாவு, ஏலப் பொடி, எள், தேங்காய்ப் பல், வேர்க்கடலைப் பொடி ஆகியவற்றுடன் அரிசி மாவைக் கலந்துகொள்ளுங்கள். பாகு வெல்லத்தில் சிறிது நீர்விட்டுக் கொதிக்கவிடுங்கள். நுரைத்துவரும்போது வடிகட்டி மீண்டும் அடுப்பில் வைத்து எடுங்கள். அதை மாவுக் கலவையில் கொட்டி, கட்டியின்றிக் கிளறுங்கள். வெண்ணெய் சேர்த்து நன்றாகக் கிளறி மூடிவிடுங்கள். நன்கு ஆறியபின் கையில் நெய் தடவி, மாவைச் சிறிய நெல்லிக்காய் அளவுக்கு உருட்டுங்கள். நெய்யும் எண்ணெயும் கலந்து வாணலியில் மிதமான சூட்டில் உருண்டைகளைப் போட்டுச் சிவக்கப் பொரித்தெடுங்கள். எண்ணெயில் சூடு அதிகமாக இருந்தால் சீடை கரைந்துவிடும்.
அவல் வெல்லம் சீர்
என்னென்ன தேவை?
அவல் - 50 கிராம்
வறுத்த முந்திரி, திராட்சை - சிறிது
பால் - ஒரு லிட்டர்
வெல்லம் - 150 கிராம்
தேங்காய்ப் பால் - அரை கப்
ஏலக்காய்ப் பொடி - சிறிது
நெய் - ஒரு டீ ஸ்பூன்
எப்படிச் செய்வது?
அவலை நன்றாகக் கழுவி வடிகட்டிக்கொள்ளுங்கள். வெல்லத்தில் சிறிது நீர் சேர்த்துக் கரைத்துக் கொதிக்கவிட்டு வடிகட்டுங்கள். சுண்டக் காய்ச்சிய பாலில் ஊறவைத்த அவலையும் நெய்யையும் சேருங்கள். நன்றாக ஊறியதும் வெல்லக் கரைசல் சேர்த்து, மேலே தேங்காய்ப் பால், வறுத்த முந்திரி, திராட்சை, ஏலக்காய்ப் பொடி சேர்த்து நன்றாகக் கிளறிப் பரிமாறுங்கள்.
புதினா தட்டை
என்னென்ன தேவை?
பச்சரிசி மாவு - ஒரு கப்
வறுத்த உளுந்து - ஒரு டீ ஸ்பூன்
பொட்டுக்கடலை - ஒரு டீ ஸ்பூன்
வெண்ணெய் - ஒரு டீ ஸ்பூன்
சீரகம் - சிறிது
பெருங்காயம் - சிறிது
கடலை பருப்பு - ஒரு டீ ஸ்பூன்
எண்ணெய் - தேவையான அளவு
அரைக்க
புதினா - கால் கட்டு
பச்சை மிளகாய் - 4
உப்பு - தேவையான அளவு
எப்படிச் செய்வது?
வறுத்த உளுந்தையும் பொட்டுக்கடலையையும் நன்றாகப் பொடித்துக்கொள்ளுங்கள். அரைக்கக் கொடுத்திருக்கும் பொருட்களை அரைத்துக்கொள்ளுங்கள். கடலைப் பருப்பை ஊறவைத்து அதனுடன் அரிசி மாவு, உளுந்து மாவு, பொட்டுக்கடலை மாவு, அரைத்த விழுது, சீரகம், வெண்ணெய் சேர்த்து நீர்விட்டு நன்றாகப் பிசைந்துகொள்ளுங்கள். மாவைச் சிறிய எலுமிச்சை அளவுக்கு உருட்டி வட்டமாகத் தட்டி, சூடான எண்ணெயில் போட்டுச் சிவக்கப் பொரித்தெடுங்கள். கூடுதல் சுவைக்கு வெள்ளை எள், பொடித்த வேர்க்கடலை, ஊறிய பொட்டுக்கடலை சேர்த்துக்கொள்ளலாம்.
கார ஓமப் பொடி
என்னென்ன தேவை?
கடலை மாவு - 200 கிராம்
அரிசி மாவு - 50 கிராம்
ஓமம் - ஒரு டீ ஸ்பூன்
காஷ்மீரி மிளகாய்ப் பொடி - அரை டீ ஸ்பூன்
பெருங்காயம் - சிறிது
நெய் - ஒரு டீ ஸ்பூன்
உப்பு, எண்ணெய் - தேவையான அளவு
எப்படிச் செய்வது?
ஓமம், உப்பு, பெருங்காயம், மிளகாய்ப் பொடி ஆகியவற்றை ஒன்றாகக் கலந்துகொள்ளுங்கள். அவற்றுடன் அரிசி மாவு, கடலை மாவு, நெய் சேர்த்துப் பிசையுங்கள். சிறிது தண்ணீர் தெளித்து முறுக்கு மாவு பதத்துக்குப் பிசைந்து, ஓமப் பொடி குழலில் நிரப்புங்கள். இதைச் சூடான எண்ணெயில் பிழிந்துவிட்டுச் சிவக்கப் பொரித்தெடுங்கள்.
கைமுறுக்கு
என்னென்ன தேவை?
காயவைத்து உலர்த்தி அரைத்த பச்சரிசி மாவு - 2 கப்
பெருங்காயப் பொடி - சிறிது
வறுத்து அரைத்த உளுந்து மாவு - 2 டீ ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
வெண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
எண்ணெய் - தேவையான அளவு
எப்படிச் செய்வது?
அரிசி மாவு, உளுந்த மாவு, உப்பு, பெருங்காயத் தூள், வெண்ணெய் சேர்த்து உதிரி உதிரியாக வரும்வரை நன்றாகப் பிசைந்துகொள்ளுங்கள். அதில் சிறிது நீர் தெளித்து சப்பாத்தி மாவைவிடச் சற்றுத் தளர்வாகப் பிசைந்துகொள்ளுங்கள். பிசைந்த மாவைச் சிறிதளவு எடுத்துக்கொள்ளுங்கள். அதில் சிறிது எண்ணெய் தொட்டு ஆள்காட்டி விரலுக்குக் கட்டை விரலுக்கும் நடுவே வைத்து உருட்டி முறுக்கு சுற்றி, சூடான எண்ணெயில் மிதமான சூட்டில் பொரித்தெடுங்கள்.
பச்சரிசி மாவு சற்றே ஈரத்தன்மையுடன் இருக்க வேண்டும். அப்போதுதான் தடையின்றி முறுக்கு சுற்ற முடியும். வெண்ணெய் அதிகமாக இருந்தாலும், குறைவாக இருந்தாலும் முறுக்கு சரியாக வராது. எண்ணெய் அதிகச் சூட்டில் இருக்கக் கூடாது. முறுக்கு சுற்றும்போது சிறிது தேங்காய் எண்ணெய் தொட்டுக்கொண்டு இரண்டு விரல்களால் சுற்றினால் சிரமமின்றி சுற்ற வரும்.
படங்கள் : எல்.சீனிவாசன்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT