

தேர்வு நாட்கள் நெருங்கிவிட்டன. பள்ளி இறுதி ஆண்டு மாணவர்கள் செய்முறைத் தேர்விலும், மற்றவர்கள் இறுதித் தேர்வுக்கான தயாரிப்பிலும் முனைப்புடன் இருக்கும் காலம் இது. படிக்கிற வேகத்தில் சிலர் சாப்பாட்டையே புறக்கணித்துவிடுவதும் உண்டு. “உடல் ஆரோக்கியமாக இருந்தால்தான் கவனம் முழுவதும் படிப்பில் குவியும். ஆரோக்கியமான சத்துணவும் போதுமான அளவு ஓய்வும் தேர்வு நேரத்தில் மாணவர்களுக்கு மிக அவசியம்” என்கிறார் சென்னையைச் சேர்ந்த அம்பிகா. தேர்வு நேரத்தில் சாப்பிட உகந்த சில உணவு வகைகளின் செய்முறையை நம்முடன் அவர் பகிர்ந்துகொள்கிறார்.
பாதாம் பால்
என்னென்ன தேவை ?
பிஸ்தா, பாதாம், அக்ரூட், முந்திரி – தலா 10
பூசணி விதை – 1 டீஸ்பூன்
ஏலக்காய் - 2
பால் - 2 கப்
மஞ்சள் தூள் - சிறிதளவு
சர்க்கரை - தேவையான அளவு
எப்படிச் செய்வது?
பாலை நன்றாகக் காய்ச்சிக்கொள்ளுங்கள். பிஸ்தா, பாதாம், அக்ரூட், முந்திரி, பூசணி விதை ஆகியவற்றை இரண்டு மணி நேரம் ஊறவையுங்கள். ஊறிய பிறகு பாதாம் பருப்பின் தோலை நீக்குங்கள். அதனுடன் ஊறவைத்த அனைத்து பருப்புகளயும் சேர்த்து மசிய அரைத்துக்கொள்ளுங்கள். அரைத்த விழுதுகளைக் காய்ச்சிய பாலில் சேர்த்து சிறிது நேரம் கொதிக்கவிடுங்கள். ஏலக்காய்ப் பொடியைப் பாலில் சேர்த்து, அடிபிடிக்காமல் பார்த்துக்கொள்ளுங்கள். சிறிது நேரம் கழித்து தேவையான அளவு சர்க்கரை, மஞ்சள் தூள் போட்டு இறக்கிவிடுங்கள். தேர்வு நேரத்தில் குழந்தைகளுக்கு இதனைக் கொடுத்தால் சோர்வடையாமல் இருப்பார்கள்.
அம்பிகா