

என்னென்ன தேவை?
பாசிப் பருப்பு ஒரு கப்
கறுப்பு கொண்டைக்கடலை ஒரு கப்
உருளைக் கிழங்கு 4
பச்சை மிளகாய் 4
நறுக்கிய வெங்காயம், தக்காளி ஒரு கப்
மஞ்சள் தூள் அரை சிட்டிகை
கரம் மசாலா 2 டீஸ்பூன்
கறிவேப்பிலை, கொத்தமல்லி - சிறிதளவு
எண்ணெய், உப்பு தேவையான அளவு
அரைக்க
காய்ந்த மிளகாய் 6
பொட்டுக்கடலை 2 டீஸ்பூன்
தேங்காய்த் துருவல் அரை கப்
இஞ்சி ஒரு துண்டு
பூண்டு 4 பல்
முந்திரி 4
சீரகம் ஒரு டீஸ்பூன்
தாளிக்க:
கடுகு அரை டீஸ்பூன்
பிரிஞ்சி இலை 1
எப்படிச் செய்வது?
கொண்டைக்கடலையை ஊறவைத்து வேகவையுங்கள். பாசிப் பருப்பை வேகவைத்து மசித்துக்கொள்ளுங்கள். உருளைக் கிழங்கை வேகவைத்து, தோலுரித்துத் துண்டுகளாக்கி மசித்த பருப்பில் சேருங்கள். அதனுடன் அரைத்த விழுது, வேகவைத்த கொண்டைக்கடலை, சிறிது தண்ணீர் சேர்த்துக் கொதிக்கவிடுங்கள். பிறகு தேவையான அளவு உப்பு, மஞ்சள் தூள், கரம் மசாலா சேர்த்து கொதிக்கவிடுங்கள்.
தக்காளி, வெங்காயத்தை எண்ணெயில் வதக்கி அதில் சேர்த்து, குழம்பு கெட்டியானதும் இறக்கிவையுங்கள். எண்ணெயில் கடுகு, பச்சை மிளகாய், பிரிஞ்சி இலை சேர்த்துத் தாளித்துக் கொட்டுங்கள். கறிவேப்பிலை, கொத்தமல்லி தூவிப் பரிமாறுங்கள். இட்லி, தோசை, சப்பாத்தி ஆகியவற்றுடன் தொட்டுக்கொண்டு சாப்பிடலாம். கும்பகோணத்தில் ஓட்டல் மற்றும் கல்யாண வீடுகளில் சிறப்பு விருந்தாகக் கடப்பாவைச் சமைப்பார்கள்.