

புரதச் சத்து நிறைந்திருக்கும் வேர்க்கடலையை வைத்து என்ன சமைப்போம்? பச்சைக் கடலையாக இருந்தால் குழம்பும், வறுத்த கடலையில் சட்னியும் கடலை உருண்டையும் செய்வோம். “வேர்க்கடலையில் இவற்றைத் தவிர ஏராளமான உணவு வகைகளைச் சமைக்கலாம்” என்கிறார் சென்னை கிழக்கு முகப்பேரைச் சேர்ந்த வரலட்சுமி முத்துசாமி. அவற்றில் சிவற்றைச் செய்யக் கற்றுத் தருகிறார்.
வேர்க்கடலை தட்டை
என்னென்ன தேவை?
வேர்க்கடலை,
பொட்டுக்கடலை - தலா 1 கப்
கடலை மாவு, அரிசி மாவு - தலா 1 கப்
மிளகாய்த் தூள் - 2 டீஸ்பூன்
பெருங்காயத் தூள் - சிறிதளவு
உப்பு, எண்ணெய்,
வெண்ணெய் - தேவையான அளவு
எப்படிச் செய்வது?
வேர்க்கடலையை வறுத்து, தோல் நீக்கவும். பொட்டுக்கடலையை லேசாக வறுக்கவும். வறுத்த பொருட்களுடன் மாவு வகைகள், மிளகாய்த் தூள், உப்பு, பெருங்காயத் தூள், வெண்ணெய் சேர்த்து சிறிதளவு தண்ணீர் தெளித்து நன்றாகப் பிசையவும். பிசைந்த மாவில் சிறிது எடுத்து வாழை இலையில் தட்டி, சூடான எண்ணெயில் போட்டுப் பொரித் தெடுக்கவும்.
வரலட்சுமி முத்துசாமி