தலைவாழை: பிரமாத சுவையில் பிரசாதங்கள்!

தலைவாழை: பிரமாத சுவையில் பிரசாதங்கள்!
Updated on
1 min read

‘ஆனைச்சாத்தன் எனப்படும் வலியன் குருவி தன் இணையோடு கீச்சிடும் ஒலி கேட்கிறது. காசுமாலையும் கழுத்தணியும் அணிந்த, வாசம் மிக்கக் கூந்தலையுடைய ஆய்ச்சியர் குலப் பெண்கள் தயிர்கடையும் ஓசை கேட்கிறது. எருமை மாடுகள் தங்கள் சிறுவீட்டிலிருந்து கிளம்பி, மேய்ச்சலுக்காகப் பசும்புல் தரையெங்கும் பரவி நிற்கின்றன. கீழ்வானம் வெளுத்துவிட்டது’ - மச்சும் குளிரும் மார்கழியின் அதிகாலைப் பொழுதைத் திருப்பாவை இப்படி விவரிக்கிறது. ‘‘பனியும் பக்தியும் கலந்து பரிமளிக்கும் காலைப் பொழுதில் கோயில் பிரசாதங்களைச் சாப்பிடுவது பேரானந்தம்’’ என்று சிலாகிக்கிறார் சென்னை கே.கே. நகரைச் சேர்ந்த சீதா சம்பத். பெரும்பாலானோருக்குப் பிடித்த, எளிமையான சில பிரசாத வகைகளைச் செய்யக் கற்றுத் தருகிறார் இவர்.

பிள்ளையார்பட்டி மோதகம்

என்னென்ன தேவை?

பச்சரிசி - ஒரு கப்

பாசிப் பருப்பு - கால் கப்

வெல்லம் - முக்கால் கப்

நெய் - ஒரு டேபிள் ஸ்பூன்

தேங்காய்த் துருவல் - ஒரு டேபிள் ஸ்பூன்

ஏலக்காய்ப் பொடி - அரை டீஸ்பூன்

எப்படிச் செய்வது?

அரிசி, பருப்பைத் தனித்தனியாக வறுத்து, ரவை போல உடைத்துக்கொள்ளுங்கள். வெல்லத்தைச் சிறிதளவு தண்ணீரில் கரைத்து வடிகட்டி, கொதிக்கவிடுங்கள். அரைத்த கலவையைப் போட்டுக் கிளறுங்கள். தேங்காய்த் துருவல், ஏலக்காய்ப் பொடி சேர்த்துக் கெட்டியாகக் கிளறி இறக்குங்கள். கையில் நெய் தடவிக்கொண்டு, கலவையில் சிறிது எடுத்து உருட்டி, மோதக வடிவத்தில் பிடித்து ஆவியில் வேகவைத்து எடுங்கள்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in