

தமிழர்களின் உணவுப் பழக்கம் தனித்துவமானது. அந்தந்தப் பருவத்தில் விளையும் காய்கறிகளைப் பொறுத்தே அவர்களது சமையலும் அமையும். உள்நாட்டுக் காய்கறிகளுக்கு முதலிடம் கொடுப்பது நம் முன்னோர்களின் வழக்கம். ‘‘பெரியவர்கள் ஏற்படுத்திச் சென்றிருக்கும் வழக்கத்தை நாம் ஏன் புறக்கணிக்க வேண்டும்? இது மாங்காய் சீசன் என்பதால் மாங்காயை வைத்து விதவிதமாகச் சமைத்து, சுவைக்கலாமே’’ என்கிறார் சென்னை கே.கே. நகரைச் சேர்ந்த சீதா சம்பத். சுவையும் மணமும் நிறைந்த மாங்காய் உணவு வகைகள் சிலவற்றைச் செய்யக் கற்றுத் தருகிறார் இவர்.
மாங்காய் சாதம்
என்னென்ன தேவை?
சாதம் - ஒரு கப்
மாங்காய்த் துருவல் - 2 கப்
பச்சை மிளகாய் - 4
மஞ்சள் தூள், வெந்தயத் தூள் - தலா கால் டீஸ்பூன்
கடுகு - அரை டீஸ்பூன்
உளுந்து, கடலைப் பருப்பு - தலா ஒரு டீஸ்பூன்
பெருங்காயத் தூள் - ஒரு சிட்டிகை
கறிவேப்பிலை - 2 ஆர்க்கு
உப்பு, எண்ணெய் - தேவையான அளவு
எப்படிச் செய்வது?
வாணலியில் எண்ணெய் விட்டுக் காய்ந்ததும் கடுகு, உளுந்து, கடலைப் பருப்பு ஆகியவற்றைச் சேர்த்து வறுத்துக்கொள்ளுங்கள். அதில் மஞ்சள் தூள், வெந்தயத் தூள், பெருங்காயத் தூள், கறிவேப்பிலை, பச்சை மிளகாய் சேர்த்து வதக்குங்கள். பிறகு மாங்காய்த் துருவல், உப்பு சேர்த்துக் கிளறி இறக்கிவையுங்கள். ஆறவைத்த சாதத்துடன் இதைச் சேர்த்துக் கிளறினால் மாங்காய் சாதம் தயார்.