

போளி
என்னென்ன தேவை?
வறுத்த வேர்க்கடலை - 1 கப்
பொட்டுக்கடலை - 1 கப்
வெல்லத் தூள் - 3 கப்
மைதா மாவு - 2 கப்
கேசரி பவுடர், ஏலப்பொடி - சிறிதளவு
நெய், தேங்காய்த் துருவல் - தலா 1 கப்
எப்படிச் செய்வது?
பொட்டுக்கடலையை லேசாக வறுத்துப் பொடிக்கவும். வேர்க்கடலையையும் பொடித்துக் கொள்ளவும். மைதா மாவுடன் கேசரி பவுடர், சிறிதளவு தண்ணீர் சேர்த்துக் கெட்டியாகப் பிசைந்து கொள்ளவும். வெல்லத்தைச் சிறிதளவு தண்ணீரில் கரைத்து அடுப்பில் வைத்துக் காய்ச்சவும். பாகு பதம் வருவதற்கு முன் தேங்காய்த் துருவல், வேர்க்கடலை, பொட்டுக்கடலை பொடிகளைச் சேர்த்து சிறிதளவு நெய் சேர்த்துச் சுருளக் கிளறி இறக்கவும்.
பிசைந்து வைத்திருக்கும் மைதா மாவிலிருந்து சிறிது எடுத்து வாழையிலையில் எண்ணெய் தடவி, வட்டமாகத் தட்டவும். வதக்கிய பூரணத்தை நடுவில் வைத்து மூடி, வட்டமாகத் தட்டவும். இதைச் சூடான தோசைக் கல்லில் போட்டு, சுற்றிலும் நெய் விட்டுச் சுட்டெடுக்கவும்.
வரலட்சுமி முத்துசாமி