

என்னென்ன தேவை?
பூசணிக்காய் - கால் கிலோ
துவரம் பருப்பு - 4 டீஸ்பூன்
தனியா - 2 டீஸ்பூன்
கடலை பருப்பு - ஒரு டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 5
புளி - சிறிய எலுமிச்சை அளவு
கடுகு - ஒரு டீஸ்பூன்
வெந்தயம், பெருங்காயத் தூள் – தலா கால் டீஸ்பூன்
தேங்காய்த் துருவல் - 2 டீஸ்பூன்
மொச்சை அல்லது வேர்க்கடலை - 4 டீஸ்பூன்
கறிவேப்பிலை, எண்ணெய் – தேவையான அளவு
எப்படிச் செய்வது?
புளியோடு சிறிதளவு உப்பு சேர்த்து தண்ணீர் ஊற்றிக் கரைத்து, வடித்துக்கொள்ளுங்கள். மொச்சை அல்லது வேர்க்கடலையை முதல் நாள் ஊறவைத்து, பிறகு வேகவைத்துக்கொள்ளுங்கள். நறுக்கிய பூசணித் துண்டுகள், துவரம் பருப்பு இரண்டையும் வேகவைத்துக்கொள்ளுங்கள்.
வாணலியில் எண்ணெய் விட்டுச் சூடானதும் தனியா, கடலைப் பருப்பு, மிளகாய் வற்றல் இவற்றை தனித்தனியாக வறுத்துக்கொள்ளுங்கள். அடுப்பை அணைத்துவிட்டு அதே சூட்டோடு தேங்காய்த் துருவலையும் போட்டு எடுத்து வைத்துக்கொள்ளுங்கள். சூடு அனைத்தையும் விழுதாக அரைத்துக்கொள்ளுங்கள். அரைத்த விழுதுடன் தேவையான அளவு தண்ணீர்விட்டுக் கொதிக்கவிடுங்கள். கொதிக்கும்போது பூசணித் துண்டுகள், மொச்சை அல்லது வேர்க்கடலை, பருப்பு ஆகியவற்றைக் கலந்து கூட்டு பதம் வரும்வரை கொதிக்கவிடுங்கள். வாணலியில் சிறிதளவு எண்ணெய் விட்டு கடுகு, வெந்தயம், பெருங்காயத் தூள் ஆகியவற்றைத் தாளித்துச் சேர்த்து இறக்கினால் பூசணிக்காய் ரசவாங்கி தயார்.
சீதா சம்பத்