

சென்னை தவிர்த்த வெளியூர்களில் வெயில் தன் கடுமையைக் கொஞ்சம் குறைத்துக் கொண்டதால், இந்தக் கோடை பலருக்கும் குதூகலக் கோடையாக அமைந்துவிட்டது. “உறவினர் வீடு, சுற்றுலா என்று வெளியூருக்குச் சென்றவர்கள் எல்லாம் வீடு திரும்பியிருப்பார்கள். வீட்டுக்கு வந்ததுமே நாவுக்கு ருசியாக எதையாவது சாப்பிடத் தோன்றும். அந்த நேரத்தில் சிறு தானியங்களைத் துணைக்கு அழைத்துவிட வேண்டியதுதான்” என்கிறார் திருத்துறைப்பூண்டியைச் சேர்ந்த பார்வதி கோவிந்தராஜ். நினைத்ததுமே செய்துவிடக்கூடிய சில எளிமையான பலகாரங்களைச் செய்யக் கற்றுத்தருகிறார் அவர்.
நெய் பக்கோடா
என்னென்ன தேவை?
கடலை மாவு - முக்கால் கப்
அரிசி மாவு - கால் கப்
பொடியாக நறுக்கிய வெங்காயம் - 1
இஞ்சி, பூண்டு விழுது - 1 டீஸ்பூன்
நெய் - 50 கிராம்
உடைத்த முந்திரி - 10
நறுக்கிய புதினா - 4 டேபிள் ஸ்பூன்
சமையல் சோடா - கால் டீஸ்பூன்
சோம்புத் தூள் - 1 டீஸ்பூன்
உப்பு, எண்ணெய் - தேவையான அளவு
எப்படிச் செய்து?
அகலமான பாத்திரத்தில் நெய்யையும் சமையல் சோடாவையும் கலந்துகொள்ளுங்கள். அத்துடன் கடலை மாவு, அரிசி மாவு தவிர மற்ற பொருட்களைச் சேர்த்து நன்றாகக் கலக்குங்கள். பிறகு மாவு வகைகளைச் சேர்த்து, சிறிது தண்ணீர் தெளித்துப் பிசையுங்கள். பிசைந்த மாவைச் சூடான எண்ணெயில் கிள்ளிப் போட்டுப் பொரித்தெடுங்கள்.
பார்வதி கோவிந்தராஜ்