

புது ஆண்டின் தொடக்கம் என்பது மகிழ்ச்சியின் தொடக்கமும்கூட. கடந்த நாட்களின் கசப்புகளை எல்லாம் மறந்து உத்வேகத்துடன் பயணப்படத் தொடங்குகிற நாளில் மனதுக்கு இனிய உணவு வகைகளைச் சுவைப்பது, கொண்டாட்டத்தின் அளவை அதிகரிக்கும். “வடை, பாயசம் என வழக்கமாகச் செய்கிற பலகாரங்களைத் தவிர்த்துவிட்டு, புதிதாகச் சில உணவு வகைகளைச் செய்யலாமே” என்று ஆலோசனை சொல்கிறார் கும்பகோணத்தைச் சேர்ந்த ராஜபுஷ்பா. கொத்துக்கறி இட்லியோடு புத்தாண்டு காலையைத் தொடங்கச் சொல்லும் இவர், நாள் முழுக்க ஒவ்வொரு வேளையும் சுவைக்கிற வகையில் சில உணவு வகைகளின் செய்முறையை நம்மோடு பகிர்ந்துகொள்கிறார்.
பனீர் கட்லெட் - என்னென்ன தேவை?
பனீர் – அரை கப்
உருளைக் கிழங்கு – ஒரு கப்
வெங்காயம் – 2
கோஸ், கேரட் (துருவியது) - 4 டீஸ்பூன்
பச்சை மிளகாய் – 3
இஞ்சி - பூண்டு விழுது – அரை டீஸ்பூன்
பாதாம் – 10
அரிசி மாவு – 2 டீஸ்பூன்
பொட்டுக் கடலை மாவு – ஒரு டீஸ்பூன்
கரம் மசாலா – 2 டீஸ்பூன்
மஞ்சள் தூள் – சிறிதளவு
மிளகாய்த் தூள் - ஒரு டீஸ்பூன்
ரஸ்க் தூள், உப்பு - தேவையான அளவு
நெய் அல்லது நல்லெண்ணெய் - தேவையான அளவு
கறிவேப்பிலை, மல்லித்தழை – சிறிதளவு
எப்படிச் செய்வது?
வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி-பூண்டு விழுது ஆகியவற்றைச் சேர்த்து வதக்குங்கள். பிறகு துருவிய கோஸ், கேரட், சிறிதளவு உப்பு, கரம் மசாலா, மஞ்சள் தூள், மிளகாய்த் தூள், கறிவேப்பிலை, மல்லித்தழை ஆகியவற்றைச் சேர்த்துக் கிளறி இறக்கிவையுங்கள். உருளைக் கிழங்குடன் பனீர், பொட்டுக்கடலை மாவு, அரிசி மாவு, துருவிய பாதாம் பருப்பு ஆகியவற்றுடன் வதக்கிய கலவையைச் சேர்த்துப் பிசைந்துகொள்ளுங்கள்.
பிசைந்த மாவைச் சிறு சிறு உருண்டைகளாக உருட்டி வட்டமாக தட்டிக்கொள்ளுங்கள். தட்டிய கட்லெட்டை ரஸ்க் தூளில் புரட்டி தோசைக் கல்லில் போடுங்கள். சுற்றிலும் எண்ணெய் விட்டு இரு புறமும் திருப்பிப் போட்டு குறைந்த தீயில் கவனமாக எடுங்கள். புரதச் சத்து நிறைந்த இந்த கட்லெட்டின் சுவை நாவை விட்டு அகலாது.
ராஜபுஷ்பா