Last Updated : 17 Apr, 2016 12:19 PM

 

Published : 17 Apr 2016 12:19 PM
Last Updated : 17 Apr 2016 12:19 PM

கிழக்கில் ஒளிரும் ஒடிஷா: ஈஷா குப்தா @ இந்திய சாலைகள்

(இந்தியா, பெண்களுக்குப் பாதுகாப்பான நாடு என்பதை உலகிற்கு உணர்த்தும் நோக்கத்துடன் சவால்கள் மிகுந்த இந்திய‌ச் சாலைகளில் இரு சக்கர வாகனத்தில் தனி ஒருத்தியாக வலம் வருகிறார் ஈஷா குப்தா. 37 வயதான ஈஷா குப்தாவின் மோட்டார் சைக்கிள் அனுபவங்கள் தொடர்கின்றன.)

ஆந்திராவின் அனல் வெயிலில் இருந்து தப்பி, ஒடிஷாவுக்குள் தடம் பதிக்கையில் மனதுக்குள் தத்துவம் பொழிகிறது. அதுவரை 37 டிகிரி வெயிலில் தகித்த ஒடிஷா, நான் நுழைந்ததும் மழையால் ஆசீர்வதிக்கப்பட்டது.

ஒடிஷாவின் நல்ல சகோதரன்

விசாகப்பட்டினத்தில் இருந்து வங்கக் கடலின் கரையோரமாகக் காற்று வாங்கிக்கொண்டே கிழக்கிந்தியாவின் ஜெய்போர் நோக்கிப் பறந்தேன். வலப்பக்கம் கடலும், இடப்பக்கம் கிழக்கு மலைத் தொடர்ச்சியும் பயணத்தை ரம்மியமாக மாற்றின. நான்கு பக்கமும் மலைகளால் சூழ்ந்த ஜெய்போர், மிகவும் பழமையான நகரம். இந்த ஊரை ஆண்ட உத்கலா மன்னர்கள் கோராபுட், ராயாகடா, நபாலங்கபோர், மால்கான்கிரி ஆகிய இடங்களில் பெரும் கோட்டைகளைக் காட்டியுள்ளனர். இந்தப் பகுதியில் ஒடியா மொழி பேசும் மக்கள் பெரும்பான்மையாக வசிக்கிறார்கள். ஜெய்போரைச் சுற்றியுள்ள மலைக் கிராமங்களில் ஒடியா, தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளைக் கலந்து பேசும் பழங்குடிகள் கணிசமாக வாழ்கின்றனர். வித்தியாசமான மொழி, கலாச்சாரத்தோடு வாழும் இம்மக்களின் தனித்துவமான‌ உணவுக் கலாச்சாரம் என்னை ஆச்சரியப்படுத்தியது.

ஜெய்போரில் இருந்து கர்லாப்போர் வழியாக பவானிபட்னா நோக்கிப் புறப்பட்டேன். வழியில் நிறைய சிற்றூர்கள். இடையிடையே களைப்பு ஏற்படும்போதெல்லாம் மைக்கியை நிறுத்திவிட்டு, அங்கிருந்த கிராமத்துக் குளங்களில் கல்லெறிந்தேன். பழைய நினைவுகளை அசைபோடக் குளக்கரையை விடச் சிறந்த இடம் இல்லை என நினைக்கிறேன்.

பவானிபட்னாவைக் கடந்து பர்க்காலா முந்தி நோக்கிப் பயணிக்கையில் சாலைகள் மிக மோசமாக இருந்தன. குனுப்பூர் அருகே சென்றுகொண்டிருந்த போது வழி மாறி ஒரு குக்கிராமத்துக்குள் போய்விட்டேன். அப்போது எதிரே வந்த ஒரு இளைஞ‌ரிடம் வழி கேட்டபோது, “கர்நாடகாவில் இருந்து இவ்வளவு தூரம் வந்திருக்கிறீர்கள். என்னை ஃபாலோ செய்யுங்கள்” எனக் கூறி சுமார் 5 கி.மீ. பயணித்து இறுதியில் எனக்கு பர்க்காலா முந்திக்குச் செல்லும் நல்ல சாலையைக் காட்டினார். தனது வேலையை விட்டு, மெனக்கெட்டு இவ்வளவு தூரம் வந்து வழிகாட்டிய அவரிடம் என‌து பயணத்தின் நோக்கத்தைச் சொன்னேன். ஆச்சரியத்தில் நெகிழ்ந்துபோன அவர், “என் பெற்றோருக்கு என்னைத் தவிர வேறு பிள்ளைகள் இல்லை. இனி நீங்கதான் என்னோட சிஸ்டர்” என அன்போடு வாழ்த்தினார். பெயர் தெரியாத பெண்ணைக்கூடச் சகோதரியாக ஏற்றுக்கொள்ளும் என் நாட்டு இளைஞனை எண்ணிப் பெருமிதம் கொண்டேன். வழிகாட்டிய அந்த நல்ல சமாரியனை, நல்ல சகோதர‌னாகவும் ஏற்றுக்கொண்டேன்.

சுகமளிக்கும் சுடுநீர் ஊற்று

கஞ்சம் நகருக்குள் சூரியோதயத்தைப் பார்த்துவிட்டு, ஒடிஷாவின் மிகப் பிரபலமான ‘தாப்தாபானி’ சுற்றுலாத் தலத்துக்குள் நுழைந்தேன். ஒடியா மொழியில் ‘தாப்தா’ என்றால் சூடு. ‘பானி’ என்றால் நீர். கிழக்குத் தொடர்ச்சி மலையில் அமைந்திருந்திருக்கும் தாப்தாபானியில் உள்ள‌ ஊற்றில் சூடாக நீர் வருகிறது. இந்தச் சுடுநீர் ஊற்றால் நிறைந்துள்ள குளத்தில் குளித்தால் தீராத தோல் வியாதிகளும் மனப் பிரச்சினைகளும் குணமாகிவிடுகின்றன என்கிறார்கள்.

தாப்தாபானியில் உள்ள மான்கள் சரணலாயத்தை ரசித்துவிட்டு, அந்தி வேளையில் சிலிகா ஏரிக்கு வந்தேன். ஆசியாவின் மிக பெரிய உவர்நீர் ஏரியான சிலிகாவின் அழகை வர்ணிக்க வார்த்தைகளே இல்லை. 1165 கி.மீ. சதுர பரப்பளவில் பரந்து விரிந்துள்ள இந்த ஏரியில் பிரேக் ஃபாஸ்ட், ஹனி மூன், பேர்ட்ஸ் ஐலண்ட், சோமாலோ என 10 அழகிய தீவுகள் இருக்கின்றன.

மிகப் பெரிய மீன்பிடி தளமான இந்த ஏரியில் 132 கிராமங்களைச் சேர்ந்த ஒன்றரை லட்சம் மீனவர்கள் தொழில் செய்கின்றனர். ஆண்டுதோறும் நவம்பர் மாதத்தில் மத்தியக் கிழக்காசியப் பகுதியைச் சேர்ந்த அரிய பறவைகள் கடல் தாண்டி இங்கு வருகின்றன. இந்தியாவிலேயே அதிகமாக இடம்பெயரும் பறவைகள் சிறகடிக்கும் சிலிகா ஏரியில் 160 வகையான பறவைகள் இருப்பதாகக் கணக்கிடப்பட்டுள்ளது.

தாய்மொழியை மிஞ்சும் கல்லின் மொழி

அதிகாலையில் 3000 ஆண்டுகள் பழமையான புவனேஷ்வர் நகரம் நோக்கிப் புறப்பட்டேன். ஒடிஷாவின் தலைநகரமான புவனேஷ்வரின் எல்லாத் திசைகளிலும் பழமையான கோயில்களும், கோட்டை கோபுரங்களும் தென்படுகின்றன. ஏற்கெனவே இருமுறை பயணித்த ஊர் என்ப‌தால் எளிதாக புவனேஷ்வரைச் சுற்றினேன். அவஞ்சர் பைக் கிளப் நண்பர்களுடன் ஒடிஷாவின் அக்மார்க் அறுசுவை உணவைச் சுவைத்துவிட்டு பூரி நகரம் நோக்கிப் புறப்பட்டேன்.

உலகப் புகழ் பெற்ற பூரி ஜெகநாதர் கோயிலின் அழகைத் தரிசித்தேன். ராஜ ஆனந்த வர்மனால் கட்டப்பட்ட இந்தக் கோயிலில் ஆண்டுதோறும் ஒன்பது நாட்கள் திருவிழா நடைபெறுகிறது. இதற்காக 45 அடி உயரமும் 35 அடி அகலமும் கொண்ட தேர் ஆண்டுதோறும் கட்டப்படுகிறது. அழகாகக் கட்டப்பட்டுள்ள தொன்மையான இந்தக் கோயிலில் த‌ரிசனம் செய்துவிட்டு வெளியே வந்தபோது, கடலை விற்கும் பாட்டியைப் பார்த்தேன். மூன்று மூக்குத்திகள் குத்திக்கொண்டு, கள்ளம் கபடமில்லாமல் அழகாகச் சிரித்துக்கொண்டிருந்தார். நண்பர்கள் மத்தியில் என்னுடைய அடையாளம் மூக்குத்திதான். ஆனால் மூன்று மூக்குத்திகள் குத்தியவரை இப்போதுதான் பார்த்தேன். எனவே அந்தப் பாட்டியை ஃபோட்டோ எடுக்க முயற்சித்தபோது, அதுவரை சாதரணமாக இருந்த அவர் திடீரென தனது முந்தானையை எடுத்து முக்காடு போட்டுக்கொண்டார். சிரிப்பை நிறுத்திவிட்டு, உர்ரென்று போஸ் கொடுத்தார். எனது கெஞ்சலுக்குப் பிறகு சிரித்துக்கொண்டே போஸ் கொடுத்தார். பாட்டியின் நடவடிக்கையில் இந்தச் சமூகம் பெண்கள் மீது திணித்திருக்கும் தேவையற்ற அச்சங்களையும் தயக்கங்களையும் உணர்ந்தேன்.

அங்கிருந்து கோனார்க் நகரில் உள்ள சூரிய பகவான் கோயிலை நோக்கிப் புறப்பட்டேன். சந்திபாகா கடற்கரையோரம் 13-ம் நூற்றாண்டில் சிவப்பு மண்பாறை, கறுப்பு கிரானைட் கற்களைக் கொண்டு இந்தக் கோயில் கட்டப்பட்டுள்ளது. மிகவும் நேர்த்தியாகக் கட்டப்பட்டுள்ள இந்தத் தொன்மையான கோயிலில் நடனமாடும் மங்கையர், குதிரைகள், யானைகள், சிங்கங்கள் மற்றும் பாலியல் கல்வியைப் போதிக்கும் சிற்பங்கள் மனதைக் கொள்ளையடிக்கின்றன. இதன் அழகில் மயங்கிய மகாகவி ரவிந்திரநாத் தாகூர், “இங்கே கல்லின் மொழி மனிதனின் மொழியை மிஞ்சி நிற்கிறது” என்று வியந்தார். இந்தியாவில் சூரிய பகவானுக்காக எஞ்சி நிற்கும் இந்தக் கோயில் யுனெஸ்கோவின் ‘உலகப் பண்பாட்டுச் சின்னம்’ என்ற சிறப்பையும் பெற்றிருக்கிறது.

கத்தி முனையில் ஆடும் ஒடிஸி

கோனார்க்கில் இருந்து ரூர்கேலா வழியாக கந்தாதார் நோக்கிப் புறப்பட்டேன். கிழக்குத் தொடர்ச்சி மலையை ஊடுருவிச் செல்லும் சாலையில் வானுயர் மரங்களும், காட்டுயிரிகளும் நிறைந்திருக்கின்றன. யானைகள் பிளிரும் ஓசையையும், மான்களின் துள்ளலையும் ரசித்துக்கொண்டே வேகமாகப் பறந்தேன். மதிய உணவு நேரத்தைத் தாண்டியும் பயணித்ததால் கடும் பசி வாட்டியது. ஒடிஷாவில் பொதுவாகச் சாப்பாட்டு நேரத்தைத் தவிர மற்ற நேரங்களில் ஹோட்டல்கள் மூடப்படுவதால், உணவைக் கண்டுபிடிப்பது பெரும் சிரமமாக இருந்தது.

கடைசியாக ஒரு மலை கிராமத்தில் சாலையோரக் கடையைக் கண்டுபிடித்தேன். அங்கே 3 பூரிகளைச் சாப்பிட்டேன். அங்கிருந்த பிங்கி என்கிற சிறுமி, “அக்கா, ரொம்ப தூரம் பைக்கில் வந்திருக்கீங்க. ரொம்ப பசிக்கும். இன்னும் ரெண்டு பூரி சேர்த்து சாப்பிடுங்க” என அன்போடு கூறினாள். அவளது வேண்டுகோளுக்காக மேலும் இரண்டு பூரிகளையும், பிளாக் டீயும் அருந்திவிட்டுப் பறந்தேன். கிழக்குத் தொடர்ச்சி மலையுச்சியை நெருங்கும்போது கந்தாதாரா அருவி, வெள்ளிக்கொடிபோலக் கொட்டிக்கொண்டிருந்தது.

800 அடியில் இருந்து கொட்டும் கந்தாதாரா அருவியைக் காண ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் குவிந்திருந்தனர். ஒடியா மொழியில் கந்தாதாரா என்றால், கத்திமுனை என்று பொருள். 1600 மீட்டர் உயரமான மலையின் முனையில் இருந்து அருவி கொட்டுவதால், இந்தப் பெயர் சூட்டப்பட்டுள்ளது. இங்கு முன்டா, சாந்தல், ஓரான் உள்ளிட்ட பழங்குடிகள் அதிக அளவில் வசிக்கின்றனர்.

சுற்றுலாப் பயணிகளைக் கவரும் வகையில் ஒடிஷாவின் பாரம்பரிய நடனமான ஒடிஸி அரங்கேற்றம் செய்யப்பட்டது. பரத நாட்டியத்திற்கும் முன்பிருந்து ஆடப்படும் இந்த நடனத்தின் ‘மங்களசரண்’ பகுதியைப் பள்ளி மாணவிகள் சிறப்பாக ஆடினர். ஒடிஷா பழங்குடியினரின் இசையுடன் அரங்கேறிய ஒடிஸி பிரமாதமாக இருந்தது. உற்சாகத்தைத் தூண்டும் இந்தக் கலை, கிழக்குத் தொடர்ச்சி மலை முழுவதும் ஒளியாகப் பட‌ர்ந்தது!

(பயணம் தொட‌ரும்) தொகுப்பு: இரா.வினோத்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x