

எப்போது கோடை விடுமுறை ஆரம்பிக்கும், எப்போது சுற்றுலா செல்லலாம் என்று குழந்தைகள் மட்டுமல்ல, பெரியவர்களும் காத்திருப்பார்கள். இரண்டு, மூன்று நாட்கள் நீடிக்கும் நீண்ட தூரப் பயணமோ அல்லது ஒரே நாளில் முடிந்துவிடுகிற சுற்றுலாவோ எதுவாக இருந்தாலும் பயணம் நம்மை மகிழ்விக்கும். பயணத்தின்போது உணவும் சரியாக அமைந்துவிட்டால் அந்த மகிழ்ச்சி இரட்டிப்பாகிவிடும். “வெளியூருக்குச் செல்லும்போது அந்தந்த ஊரின் உணவைச் சுவைத்துப் பார்ப்பது வித்தியாசமான அனுபவமாக இருக்கும். அதற்காக நம் வீட்டுத் தயாரிப்பை ஒரேடியாகப் புறக்கணித்துவிடவும் கூடாது” என்று சொல்கிறார் கும்பகோணத்தைச் சேர்ந்த ராஜபுஷ்பா. வயிற்றுக்கும் சுற்றுலாவுக்கும் உகந்த சில வகை உணவைச் சமைக்கக் கற்றுத்தருகிறார் இவர்.
மசாலா காக்ரா
என்னென்ன தேவை?
கோதுமை மாவு – அரை கிலோ
சீரகப் பொடி - 1 டீஸ்பூன்
மிளகுப் பொடி - 2 டீஸ்பூன்
மஞ்சள் தூள் – அரை டீஸ்பூன்
கடலை மாவு - 2 டீஸ்பூன்
சர்க்கரை – ஒன்றரை டீஸ்பூன்
வெண்ணெய் - 4 டீஸ்பூன்
காய்ந்த வெந்தயக் கீரை (அ) முருங்கைக் கீரை - 1 கைப்பிடி அளவு
உப்பு - தேவையான அளவு
எப்படிச் செய்வது?
கோதுமை மாவுடன் வெந்தயக் கீரை, கடலை மாவு, சீரகப் பொடி , மிளகுப் பொடி, சர்க்கரை, வெண்ணெய், மஞ்சள் தூள், உப்பு சேர்த்து, தண்ணீர் விட்டுச் சற்று கெட்டியாகப் பிசையுங்கள். பிசைந்த மாவைச் சப்பாத்தியாக உருட்டிக்கொள்ளுங்கள்.
தோசைக் கல் சூடானதும் தேய்த்துவைத்த சப்பாத்தியைப் போடுங்கள். சுத்தமான பருத்தித் துணியைப் பந்து போல் சுருட்டி, சப்பாத்தியின் இரு புறங்களிலும் ஒற்றியெடுங்கள். கருகிவிடக் கூடாது. பிஸ்கட் போல் மொறுமொறுப்பானதும் எடுத்துவிடுங்கள். பல நாட்களுக்குக் கெடாது. ருசியும் மாறாது.
ராஜபுஷ்பா