

கோடை விடுமுறையைக் கொண்டாட முடியாத அளவுக்குப் பல ஊர்களிலும் வெயில் வாட்டியெடுக்கிறது. வெயில் அதிகமாக இருக்கிறது என்பதற்காகக் குழந்தைகள் தங்கள் விளையாட்டைக் குறைத்துக்கொள்வதில்லை. நாள் முழுக்க கம்ப்யூட்டர், மொபைல் போன் ஆகியவற்றில் மூழ்கியிருந்த குழந்தைகள்கூட நண்பர்களோடும் உறவினர்களோடும் சேர்ந்து விளையாடுவதற்கான வாய்ப்பை இந்தக் கோடை விடுமுறை வழங்கியிருக்கிறது. “ஓடியாடி களைத்துவரும் குழந்தைகளுக்கு மதிய வேளையில் குளிர்ந்த பானங்களைக் கொடுப்பது போல மாலை வேளையில் சூடான பலகாரங்களைக் கொடுக்கலாம். வழக்கமான பஜ்ஜி, வடையைத் தவிர்த்துவிட்டு விதவிதமான போண்டா செய்து தரலாம்” என்கிறார் சென்னை தேனாம்பேட்டையைச் சேர்ந்த மேகலா. அவற்றை எப்படிச் செய்வது என்றும் நம்முடன் பகிர்ந்துகொள்கிறார்.
சீஸ் போண்டா
என்னென்ன தேவை?
சீஸ் - 2 துண்டு
குடைமிளகாய் - 1
மைதா மாவு - அரை கப்
சோள மாவு, அரிசி மாவு – தலா கால் கப்
உப்பு, எண்ணெய் - தேவையான அளவு
எப்படிச் செய்வது?
மைதா, சோள மாவு, அரிசி மாவு ஆகியவற்றுடன் சிறிதளவு உப்பு போட்டு இட்லி மாவு பதத்தில் கரைத்துக்கொள்ளுங்கள். அதில் துருவிய சீஸ், நறுக்கிய குடைமிளகாய் போட்டு மாவுடன் நன்றாகக் கலந்துகொள்ளுங்கள். இந்த மாவைச் சிறு உருண்டைகளாக உருட்டி, சூடான எண்ணெயில் போட்டுப் பொரித்தெடுங்கள்.
- மேகலா