

என்னென்ன தேவை?
அரிசி மாவு ஒரு கப்
தேங்காய்த் துருவல் ஒரு டேபிள் ஸ்பூன்
வெல்லம், தேங்காய்ப் பால் தலா ஒரு கப்
காய்ச்சிய பால் ஒரு கப்
ஏலக்காய்ப் பொடி கால் டீஸ்பூன்
முந்திரித் துண்டுகள் - சிறிதளவு
நெய் ஒரு டீஸ்பூன்
உப்பு ஒரு சிட்டிகை
எப்படிச் செய்வது?
அரிசி மாவை வெறும் வாணலியில் சிவக்க வறுத்துக்கொள்ளுங்கள். தேவையான அளவு தண்ணீரைக் கொதிக்கவைத்து, அதில் மாவைக் கொட்டிக் கிளறுங்கள். அதனுடன் தேங்காய்த் துருவல், உப்பு சேர்த்துக் கெட்டியாகக் கிளறி இறக்கிவையுங்கள். சூடு ஆறியதும் கையில் நெய் தடவிக் கொண்டு மாவைச் சிறு சிறு உருண்டைகளாக உருட்டி ஆவியில் வேகவையுங்கள்.
வெல்லத்தைச் சிறிதளவு தண்ணீரில் கரைத்து வடிகட்டுங்கள். காய்ச்சிய பாலை அதில் கலந்து, மிதமான தீயில் வைத்துக் கொதிக்கவிடுங்கள். கொதிக்கிற கலவையில் வேகவைத்த உருண்டைகளைப் போட்டு மெதுவாகக் கலக்குங்கள். அடுப்பை அணைத்துவிட்டு ஏலக்காய்த் தூள், தேங்காய்ப் பால் சேர்த்துக் கலக்குங்கள். முந்திரித் துண்டுகளை நெய்யில் வறுத்துச் சேர்த்துப் பரிமாறுங்கள்.