

மட்டன் கோலா, சிக்கன் கோலா என அசைவ உணவில் கோலாவைக் கேள்விப்பட்டிருப்போம். ஆனால் பலரும் வறுவலுக்கு மட்டும் பயன்படுத்தும் வாழைக்காயிலும் கோலா செய்யலாம் என்கிறார் தேனி, பிசிபட்டியைச் சேர்ந்த ஆசிரியர் லட்சுமிபிரபா. அதன் செய்முறையையும் அவரே சொல்கிறார்.
என்னன்ன தேவை?
வாழைக்காய் - 2
சின்னவெங்காயம் - 5
வெள்ளைப்பூண்டு - 2
மிளகாய் வற்றல் - 3
மஞ்சள்தூள் - 1 சிட்டிகை,
உப்பு - தேவையான அளவு
உளுந்து - 1 டேபிள்ஸ்பூன்
பொரிகடலை - 1 டேபிள்ஸ்பூன்
தேங்காய் - சிறிதளவு
சோம்பு, கசகசா, சீரகம், கறிவேப்பிலை - சிறிதளவு
கடலை எண்ணெய் - அரை லிட்டர்
எப்படிச் செய்வது?
வாழைக்காய்களை வேகவைத்துக் கொள்ளவும். ஆறியதும் தோலை உரித்துவிட்டு தண்ணீர் சேர்க்காமல் விழுதாக அரைத்துக்கொள்ளவும். உளுந்தையும் பொரிகடலையையும் லேசாக வறுத்து மாவாகப் பொடித்துக் கொள்ளவும். தேங்காய், சின்ன வெங்காயம், மிளகாய் வற்றல், சோம்பு, கசகசா, சீரகம், கறிவேப்பிலை இவற்றை ஒன்றாகச் சேர்த்து கெட்டியாக அரைத்துக்கொள்ளவும். அரைத்த விழுது, வாழைக்காய் விழுது, உப்பு, மஞ்சள்தூள் ஆகியவற்றை ஒன்றாகச் சேர்த்து உளுந்து பொடி, பொரிகடலைப் பொடி ஆகியவற்றைச் சிறிது சிறிதாகச் சேர்த்து நன்றாகப் பிசையவும். பிசைந்த கலவையை உருண்டையாகவோ,
கொஞ்சம் தட்டையாகவோ செய்து வைத்துக்கொள்ளவும். வாணலியில் கடலை எண்ணெயை ஊற்றி, சூடானதும் உருட்டி வைத்திருக்கும் உருண்டைகளை இரண்டிரண்டாகப் போட்டு
பொன்னிறமாகப் பொரித்து எடுக்கவும். இதைச் சாம்பார் சாதம், ரசம் சாதம், தயிர்சாதம், புளி சாதம், எலுமிச்சை சாதம் போன்றவற்றுடன் சேர்த்து சாப்பிடலாம்.
குறிப்பு: லட்சுமி பிரபா