

நவராத்திரி என்றாலே வெற்றிலை பாக்கு, பூக்கள் என்று வீடே மங்களகரமாக இருக்கும். அந்தச் சூழ்நிலைக்கு இந்தத் தாம்பூலம் மிகவும் பொருத்தமாக இருக்கும்.
என்னென்ன தேவை?
வெற்றிலை - 12
தேங்காய்த் துருவல் - 1 டீஸ்பூன்
கேரட் துருவல் - 1 டீஸ்பூன்
பன்னீர் ரோஜா இதழ்கள் - 12
முந்திரித்துண்டுகள், பேரீச்சைத் துண்டுகள், கிஸ்மிஸ் திராட்சை - தலா அரை டீஸ்பூன்
இஞ்சித் துருவல் - கால் டீஸ்பூன்
ஏலக்காய்ப் பொடி - அரை டீஸ்பூன்
சர்க்கரை - ஒரு டீஸ்பூன்
கிராம்பு - 6
வாசனைப்பாக்கு பொட்டலம் - 3
சுண்ணாம்பு - சிறிதளவு
எப்படிச் செய்வது?
வெற்றிலையை நன்றாகக் கழுவி, காம்பு நீக்கவும். 6 வெற்றிலைகளின் மீது சுண்ணாம்பு தடவவும். ஒரு பாத்திரத்தில் வாசனைப் பாக்கு பொட்டலங்களைப் பிரித்துப் போடவும். அதோடு கிராம்பு நீங்கலாக மற்றப் பொருட்களைக் கலந்துகொள்ளவும்.
இதை 6 பங்காகப் பிரித்துக்கொள்ளவும். சுண்ணாம்பு தடவிய வெற்றிலை மீது ஒரு பங்கு கலவை வைத்து மடித்து அதைச் சுண்ணாம்பு தடவாத இன்னொரு வெற்றிலை மீது வைத்து மடித்து மூடவும். இரண்டு வெற்றிலையையும் சேர்த்து ஒரு கிராம்பைக் குத்தி இணைக்கவும்.
கும்பகோணம் வெற்றிலையில் செய்தால் நன்றாக இருக்கும். கொல்கத்தா வெற்றிலை கிடைத்தால் மிகவும் வாசனையாக இருக்கும். கொல்கத்தா வெற்றிலை மிகப் பெரிதாக இருப்பதால் ஒரு பீடா தயாரிக்க ஒரு வெற்றிலையே போதும்.
குறிப்பு: மீனலோசனி பட்டாபிராமன்