

என்னென்ன தேவை?
பச்சைப்பயறு - 1 டம்ளர்
சின்ன வெங்காயம் - 4
காய்ந்த மிளகாய் - 2
சீரகம், தனியா - தலா 2 டீஸ்பூன்
பூண்டு - 4 பல்
கடுகு, கறிவேப்பிலை - சிறிதளவு
நல்லெண்ணெய், உப்பு - தேவைக்கு
எப்படிச் செய்வது?
ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி கொதிக்கவிடவும். அதில் பச்சைப்பயறைச் சேர்த்து வேகவிடவும். பயறு வெந்ததும், தண்ணீரை தனியாக வடிக்கவும். வாணலியில் சிறிது நல்லெண்ணெய் ஊற்றி, காய்ந்த மிளகாய், தனியா, சீரகம், பூண்டு, கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும். கலவை பொன்னிறமானதும் இதை வேகவைத்த பச்சைப்பயறுடன் சேர்க்கவும். வடித்து வைத்திருக்கும் தண்ணீரில் சிறிது அந்தக் கலவையில் ஊற்றி மீண்டும் கொதிக்கவிடவும். கலவை நன்றாகத் திரண்டு மணம் வரும்போது இறக்கி வைத்து, மத்தால் கடைந்தால் பச்சைப்பயறு குழம்பு தயார்.
பச்சைப்பயறு வேகவைத்தத் தண்ணீரை வீணாக்காமல் அதில் ரசம் வைக்கலாம். அந்தத் தண்ணீருடன் இரண்டு தக்காளியைப் பிழிந்து சேர்க்கவும். சிறிது புளியைக் கரைத்து ஊற்றி, சிறிது மிளகு, சீரகம், பூண்டு ஆகியவற்றைத் தட்டிச் சேர்க்கவும். சிறிதளவு நல்லெண்ணெயைக் காயவைத்து அதில் கடுகு, கறிவேப்பிலை சேர்த்துத் தாளிக்கவும். சிறிதளவு வெங்காயத்தைச் சேர்த்து வதக்கவும். அதில் ரசக்கலவையை ஊற்றி, தேவையான உப்பு போடவும். நுரை வரும் போது இறக்கவும். அருமையான பச்சைப்பயறு ரசம் தயார்.