வகை வகையான சித்திரை விருந்து: சம்பா கோதுமைப் பால் பாயசம்
சித்திரை முதல் நாள் தமிழர்களுக்குத் திருநாள். வெயிலைச் சுமந்துவரும் இந்த மாதத்தை இன்முகமும் இனிப்புமாக வரவேற்பார்கள். சித்திரை முதல் நாளன்று பலரது வீடுகளிலும் விதம் விதமாக விருந்து மணக்கும். மாங்காயில் வேப்பம்பூவைச் சேர்த்து சிலர் பச்சடி செய்வார்கள். சித்திரை முதல் நாளன்று செய்யக்கூடிய உணவு வகைகள் சிலவற்றைச் சமைக்கக் கற்றுத்தருகிறார் கும்பகோணத்தைச் சேர்ந்த ராஜபுஷ்பா.
சம்பா கோதுமைப் பால் பாயசம்
என்னென்ன தேவை?
சம்பா கோதுமை - 100 கிராம்
பச்சரிசி - 1 கைப்பிடி அளவு
தேங்காய் – அரை மூடி (துருவியது)
வெல்லம் - 100 கிராம் (துருவியது)
பாதாம் - 10 கிராம் (துருவியது)
முந்திரி, திராட்சை - தலா 10 கிராம்
லவங்கம் - 2
காய்ச்சிய பால் – கால் லிட்டர்
ஏலக்காய் - 3
எப்படிச் செய்வது?
கோதுமையை லேசாக வறுத்து ஒன்றிரண்டாக உடைத்து ஊறவையுங்கள். பச்சரிசியைத் தனியாக ஊறவையுங்கள். ஊறவைத்த பச்சரியோடு தேங்காய், ஏலக்காய் இரண்டையும் சேர்த்து அரைத்துக்கொள்ளுங்கள். ஊறிய கோதுமையைத் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி வேகவையுங்கள். நன்றாக வெந்ததும் துருவிய வெல்லத்தைச் சேர்த்துக் கிளறிவிடுங்கள். வெல்லம் கரைந்ததும் முந்திரி, திராட்சை, லவங்கம் ஆகியவற்றைச் சேருங்கள். அரைத்த பச்சரிசி மாவைச் சேர்த்து அடிபிடிக்காமல் கிளறிவிடுங்கள். பிறகு பாலை ஊற்றி, சிறிது நேரம் கொதிக்கவிடுங்கள். எல்லாம் கலந்து வாசனை வரும்போது ஏலக்காய், பாதாம் பருப்பு இரண்டையும் சேர்த்து இறக்கிவிடுங்கள்.
