

என்னென்ன தேவை?
சீரகச் சம்பா அரிசி - 1 கிலோ
ஆட்டுக் கறி - 1 கிலோ
பெரிய வெங்காயம் - 4
தக்காளி - 3
பச்சை மிளகாய் - 3
எலுமிச்சை - பாதி (சாறு பிழிந்துகொள்ளுங்கள்)
இஞ்சி - பூண்டு விழுது – 2 டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 15
தயிர் - 1 குழிக் கரண்டி
மல்லி, புதினா - சிறிதளவு
மஞ்சள் தூள், உப்பு - தேவையான அளவு
தாளிக்க:
பட்டை - 3
கிராம்பு - 5
ஏலக்காய் - 5
முந்திரி – 15 (வறுத்தது)
நெய் – ஒன்றரைக் குழிக் கரண்டி
கடலை எண்ணெய் - 2 குழிக் கரண்டி
கறிவேப்பிலை - சிறிதளவு
எப்படிச் செய்வது?
கறியைச் சுத்தம்செய்து சிறிதளவு உப்பு, மஞ்சள் தூள், மிளகாய்த் தூள், இஞ்சி - பூண்டு விழுது ஆகியவற்றைச் சேர்த்து ஐந்து விசில் விட்டு இறக்குங்கள். காய்ந்த மிளகாயைத் தண்ணீரில் ஊறவைத்து விழுதாக அரைத்துக் கொள்ளுங்கள். சீரகச் சம்பா அரிசியைக் கழுவி 15 நிமிடம் ஊறவையுங்கள். அடுப்பில் கனமான பாத்திரத்தை வைத்து நெய், கடலை எண்ணெய், பட்டை, கிராம்பு, ஏலக்காய் ஆகியவற்றைச் சேர்த்துத் தாளியுங்கள்.
அதில் வெங்காயத்தைச் சேர்த்து சிவக்க வதக்குங்கள். வெங்காயம் பாதி வதங்கியதும் இஞ்சி - பூண்டு விழுதைச் சேர்த்துச் சிவக்க வதக்குங்கள். பிறகு தக்காளியையும் பச்சை மிளகாயையும் சேர்த்து, தக்காளி கரையும்வரை வதக்குங்கள். அரைத்த மிளகாய் விழுது, தயிர், எலுமிச்சைச் சாறு மூன்றையும் சேர்த்துக் கிளறுங்கள்.
எல்லாம் கலந்து வாசனை வரும்போது மல்லி, புதினா, முந்திரி, வேகவைத்துள்ள கறி ஆகியவற்றைச் சேர்த்து வதக்குங்கள். பிறகு அரிசியைச் சேர்த்து வதக்கி, தேவையான அளவு (ஐந்து டம்ளர் அரிசிக்கு எட்டரை டம்ளர் தண்ணீர்) ஊற்றி, உப்பு சரி பார்த்துக் கொதிக்கவிடுங்கள்.
அரிசி முக்கால் பதம் வெந்ததும் கனமான தோசைக்கல்லை அடுப்பில் வைத்து அதன் மீது பிரியாணி பாத்திரத்தை வைத்து மூடிவிடுங்கள். தீயைக் குறைத்து மூடியின் மீது கனமான பாத்திரத்தை வையுங்கள். 20 நிமிடம் கழித்துத் திறந்தால் சுவையான தம் பிரியாணி தயார்.