

பெண்களுக்கு முப்பது வயது கடந்துவிட்டாலே கால்சியச் சத்து பற்றாக்குறை ஏற்பட்டுவிடுகிறது. அதைத் தவிர்க்கப் போதுமான அளவு பால் எடுத்துக்கொள்வது நல்லது என்று மருத்துவர்கள் சொல்கிறார்கள். பால் வாடை பிடிக்காத பலரும் கடமைக்காகப் பால் அருந்துவார்கள். ஆனால் பாலிலும் விதவிதமாக உணவு சமைக்கலாம் என்கிறார்கள் நம் வாசகிகள். தங்கள் கைப்பக்குவத்தை நம்முடன் பகிர்ந்துகொள்கிறார்கள்.
கேசரியும் எளிய செய்முறை கொண்ட இனிப்புதான். ரவை கேசரியைப் பால் ஊற்றி செய்தால் அதுதான் பால் கேசரி என்கிறார் தென்காசியைச் சேந்த செண்பகம். அதை எப்படிச் செய்வது என்று பார்க்கலாம்.
என்னென்ன தேவை?
ரவை - 1 டம்ளர்
சர்க்கரை - ஒன்றரை டம்ளர்
பால் - 2 டம்ளர்
கேசரி பவுடர் (விரும்பினால்) - சிட்டிகை
முந்திரி, ஏலக்காய், திராட்சை - சிறிதளவு
நெய் - தேவைக்கு.
எப்படிச் செய்வது?
ரவையை நன்றாக மணல் போல வறுக்கவும். விரும்பினால் லேசாக நெய் விட்டும் வறுக்கலாம். பாலைக் கொதிக்கவிட்டு அதில் வறுத்த ரவை, கேசரி பவுடர், ஏலக்காய்த்தூள் ஆகியவற்றைச் சேர்த்துக் கிளறவும். ரவை வெந்ததும் சர்க்கரையைச் சேர்த்துக் கிளறவும். சர்க்கரை இளகி கேசரி பதம் வந்ததும் நெய் சேர்த்துக் கிளறி இறக்கவும். முந்திரி, திராட்சையை நெய்யில் வறுத்துச் சேர்க்கவும்.