

காரடையான் நோன்பு நாளன்று விளக்கேற்றி இலையில் வெல்ல அடை, கார அடை, உருகாத வெண்ணெய் ஆகியவற்றை வைத்து நெய்வேத்தியம் செய்வார்கள். எமனிடமிருந்து கணவன் சத்தியவானை மீட்டுவந்த சாவித்திரி கடைப்பிடித்த நோன்பு இது எனவும் சொல்வார்கள். நோன்பு அன்று செய்யக்கூடிய பலகாரங்கள் சிலவற்றைச் செய்யக் கற்றுத்தருகிறார் சென்னை கிழக்கு முகப்பேரைச் சேர்ந்த வரலட்சுமி முத்துசாமி.
அப்பளப் பாயசம்
என்னென்ன தேவை ?
மைதா – 1 கப்
ரவை – 1 கப்
நெய் – 2 டீஸ்பூன்
பால் – 1 லிட்டர்
கேசரி பவுடர் – சிறிது
ஏலக்காய்ப் பொடி – 1 டீஸ்பூன்
எண்ணெய் – தேவைக்கு
சர்க்கரை – 3 கப்
எப்படிச் செய்வது?
மைதா, ரவையோடு நெய், சிறிதளவு தண்ணீர் சேர்த்து நன்றாகப் பிசைந்துகொள்ளுங்கள். பிசைந்த மாவை அரை மணிநேரம் ஊறவையுங்கள். பின்னர் மாவை அப்பளம்போல் திரட்டி எண்ணெய்யில் பொரித்தெடுத்துக்கொள்ளுங்கள். அடி கனமான பாத்திரத்தில் பால் ஊற்றி, சுண்டக் காய்ச்சுங்கள். அதனுடன் சர்க்கரை, ஏலக்காய்த் தூள், கேசரி பவுடர் ஆகியவற்றைச் சேருங்கள். சர்க்கரை நன்றாகக் கரைந்ததும் பாலை இறக்கி, பொரித்துவைத்துள்ள அப்பளத் துண்டுகளைப் போடுங்கள். நீண்டநேரம் ஊறவிடாமல் உடனே பரிமாறுங்கள்.