

புரதச் சத்து நிறைந்த பருப்பு வகைகளை அன்றாடம் உணவில் சேர்த்துக்கொள்வது நல்லது. அதற்காகத் தினமும் சாம்பார் வைத்தால் அலுத்துப்போகும் எனச் சிலர் நினைக்கலாம். பருப்பு வகைகளில் சாம்பாரைத் தவிர ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வகையாகச் சமைத்து ருசிக்கலாம் என்கிறார் சென்னை கே.கே.நகரைச் சேர்ந்த சீதா சம்பத். அவற்றில் சிலவற்றைச் சமைக்கவும் அவர் கற்றுத்தருகிறார்.
அவரைக்காய் பொரித்த கூட்டு
என்னென்ன தேவை?
அவரைக்காய் – 100 கிராம்
பாசிப்பருப்பு – கால் கப்
கடுகு – அரை டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு – அரை டீஸ்பூன்
சீரகம் – 1 டீஸ்பூன்
பொடித்த மிளகு – அரை டீஸ்பூன்
பெருங்காய்த் தூள் – கால் டீஸ்பூன்
சாம்பார் பொடி – 1 டீஸ்பூன்
தேங்காய்த் துருவல் – கால் கப்
உப்பு – தேவைக்கு
கறிவேப்பிலை – ஒரு கொத்து
எண்ணெய் – 1 டீஸ்பூன்
எப்படிச் செய்வது?
அவரைக்காயைக் கழுவிப் பொடியாக நறுக்கி வைத்துக்கொள்ளுங்கள். அதனுடன் பாசிப்பருப்பு, சாம்பார் பொடி இரண்டையும் சேர்த்து குக்கரில் போட்டு வேகவைத்து எடுத்துக்கொள்ளுங்கள். வாணலியில் எண்ணெய் விட்டுச் சூடானதும் கடுகு, உளுத்தம் பருப்பு, மிளகு, சீரகம், பெருங்காயம் ஆகியவற்றைப் போட்டுத் தாளியுங்கள். வேகவைத்த அவரைக்காய்க் கலவையை அதில் சேர்த்துத் தேவையான அளவு உப்பு போட்டு நன்றாகக் கொதிக்க விடுங்கள். எல்லாம் சேர்ந்து கூட்டு பதம் வந்ததும் தேங்காய்த் துருவல், கறிவேப்பிலை இரண்டையும் சேர்த்துக் கிளறி இறக்குங்கள்.