

தேர்வு நெருங்கிவிட்டாலே புத்தகமும் கையுமாகத்தான் பெரும்பாலான குழந்தைகள் இருப்பார்கள். படித்த பாடத்தை நினைவில் வைத்துக்கொள்வதற்காக மீண்டும் மீண்டும் படித்துக் களைப்பாகிவிடுவார்கள். இதுபோன்ற நேரத்தில் அவர்களுக்கு ஆரோக்கியமான உணவு வகைகளை அளிப்பது அவசியம். தேர்வு நேரத்தில் மூளையும் உடலும் சுறுசுறுப்பாக இருக்கவும் நினைவாற்றல் பெருகவும் சத்தான உணவு வகைகள் சிலவற்றைச் செய்யக் கற்றுத்தருகிறார் சென்னை நொளம்பூரைச் சேர்ந்த ர.கிருஷ்ணவேணி.
தனியா சூப்
என்னென்ன தேவை?
தனியா, சீரகம் – தலா 2 டீஸ்பூன்
இஞ்சி – சிறு துண்டு
மிளகு – கால் டீஸ்பூன்
எலுமிச்சைச் சாறு – 1 டீஸ்பூன்
நறுக்கிய பூண்டு – 1 டீஸ்பூன்
நெய் – அரை டீஸ்பூன்
உப்பு – தேவைக்கு
எப்படிச் செய்வது?
தனியாவையும் சீரகத்தையும் சிறிது நேரம் ஊறவைத்து, இவற்றுடன் இஞ்சி, மிளகு இரண்டையும் சேர்த்து அரைத்துக்கொள்ளுங்கள். அரைத்த கலவையுடன் சிறிதளவு உப்பைச் சேர்த்து இரண்டு கப் தண்ணீர் ஊற்றி அடுப்பில் வையுங்கள். நன்றாகக் கொதித்ததும் அடுப்பை அணைத்துவிட்டு சூப்பை வடிகட்டுங்கள். அதனுடன் எலுமிச்சைச் சாறு, நெய்யில் வதக்கிய பூண்டு இரண்டையும் சேர்த்துச் சூடாகப் பரிமாறுங்கள். இரவில் நீண்ட நேரம் கண் விழித்துப் படிப்பதால் உண்டாகும் பித்தத்தை இந்த சூப் குறைக்கும்.
செம்ம ருசி: மணமணக்கும் மட்டன் ஈரல் வறுவல்