

தினமும் ஒரே விதமாகச் சமைத்தால் சாப்பிடுகிறவர்களுக்கு மட்டுமல்ல சமைக்கிறவர்களுக்கும் அலுப்பாகத்தான் இருக்கும். கொஞ்சம் மாற்றி யோசித்தால் வழக்கமாக நாம் பயன்படுத்தும் காய்கறிகளிலேயே புது விருந்து படைக்கலாம் என்கிறார் கும்பகோணத்தைச் சேர்ந்த ராஜபுஷ்பா. சத்தும் சுவையும் நிறைந்த புதுவகை உணவு சிலவற்றைச் சமைக்க அவர் கற்றுத்தருகிறார்.
காலிபிளவர் தயிர் சாதம்
என்னென்ன தேவை?
காலிபிளவர் – 1 (சிறியது)
தயிர் - 4 குழிக்கரண்டி
காய்ச்சிய பால் - 2 குழிக்கரண்டி
வெண்ணெய் - 2 டீஸ்பூன்
மாங்காய்த் துருவல் - சிறிதளவு
உப்பு – தேவையான அளவு
தாளிக்க:
கடுகு, உளுந்து, கறிவேப்பிலை, நெய்,
நறுக்கிய இஞ்சி, மிளகாய் - சிறிதளவு
எப்படிச் செய்வது?
காலிபிளவரைச் சுத்தம்செய்து அலசிக்கொள்ளுங்கள். அதைத் தயிரில் சிறிது தண்ணீர் சேர்த்துக் குழையாமல் வேகவைத்துக்கொள்ளுங்கள். வெந்ததும் காய்கறித் துருவியால் துருவிக்கொள்ளுங்கள் (சோறுபோல் பூப்பூவாக இருக்க வேண்டும்). துருவிய காலிபிளவரில் தயிர், காய்ச்சிய பால், வெண்ணெய், மாங்காய்த் துருவல், உப்பு ஆகியவற்றைச் சேர்த்து மசித்துக்கொள்ளுங்கள். நெய் ஊற்றித் தாளிக்க வேண்டியவற்றைத் தாளித்துக் கொட்டிக் கிளறுங்கள். தயிரில் வேகவைப்பதால் காலிபிளவர் தயிர் சாதம் மணமாகவும் சுவையாகவும் இருக்கும்.