

அமெரிக்கா போன்ற வெளிநாடுகளில் சமைக்கப்படும் சைவ உணவை வாயில் வைக்கவே முடியாது எனச் சிலர் சொல்வார்கள். ஆனால், அங்கேயும் சில உணவகங்களில் நம் ஊர் உணவு வகைகளைப் போலவே வித்தியாசமான பெயர்களுடனும் செய்முறையில் சில வேறுபாடுகளுடனும் சைவ உணவுகள் கிடைக்கின்றன. அமெரிக்காவுக்குச் சென்றபோது அந்த உணவு வகைகளைச் சுவைத்த சென்னை வாசகி ராஜகுமாரி, அவற்றில் சிலவற்றின் செய்முறையை நம்முடன் பகிர்ந்துகொள்கிறார். குழந்தைகளையும் விருந்தினர்களையும் மகிழ்விக்க இதை ஒரு வாய்ப்பாகப் பயன்படுத்தலாம்.
ஃபலாஃபல் அண்ட் ஹம்மஸ்
என்னென்ன தேவை?
கொண்டைக்கடலை (வெள்ளை) – 400 கிராம்
பெரிய வெங்காயம் – 2
பூண்டுப் பற்கள் – 3
பச்சை மிளகாய் - 1
மிளகுத் தூள் - 2 டீஸ்பூன்
சிவப்புக் குடைமிளகாய்ப் பொடி (Paprika) - 2 டேபிள் ஸ்பூன்
எண்ணெய், உப்பு – தேவையான அளவு
சமையல் சோடா – ஒரு டீஸ்பூன்
அரிந்த மல்லித் தழை - கால் கப்
Parsley இலைகள் – 2 டேபிள் ஸ்பூன்
சோள மாவு- 4 டேபிள் ஸ்பூன்
எப்படிச் செய்வது?
வெள்ளைக் கொண்டைக்கடலையை ஆறு மணி நேரம் ஊறவைத்து, உப்பு சேர்த்து வேகவிடுங்கள். வெந்த கொண்டைக்கடலையுடன் பெரிய வெங்காயம், பூண்டு, பச்சை மிளகாய் ஆகியவற்றைச் சேருங்கள். பாப்ரிக்கா, மிளகுத் தூள், மல்லித் தழை ஆகியவற்றையும் சேர்த்துக் கெட்டியாக அரையுங்கள். இந்த மாவில் சோடா, சோள மாவு இரண்டையும் சேர்த்துப் பிசைந்து வடைகளாகத் தட்டிப் போட்டுப் பொரித்தெடுங்கள்.
என்னென்ன தேவை?
வெள்ளைக் கொண்டைக்கடலை – 100 கிராம்
வறுத்த வெள்ளை எள் – 4 டேபிள் ஸ்பூன்
ஆலிவ் எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்
பூண்டுப் பற்கள் – 1 டேபிள் ஸ்பூன்
எலுமிச்சைச் சாறு – 2 டேபிள் ஸ்பூன்
தனி மிளகாய்த் தூள் – 2 டேபிள் ஸ்பூன்
சீரகப் பொடி – 1 டீஸ்பூன்
எப்படிச் செய்வது?
கொண்டைக்கடலையை ஆறு மணி நேரம் ஊறவைத்து, உப்பு சேர்த்து வேகவையுங்கள். எள்ளை வெறும் வாணலியில் வறுத்துக்கொள்ளுங்கள். மிக்ஸியில் எள்ளைப் போட்டு ஒரு சுற்று சுற்றி, பிறகு கொண்டைக்கடலை, பூண்டு, மிளகாய்த் தூள் ஆகியவற்றைச் சேர்த்து அளவான நீர்விட்டு அரையுங்கள். இந்த விழுதுடன் எலுமிச்சைச் சாறு, ஆலிவ் எண்ணெய் இரண்டையும் சேர்த்துக் கலக்குங்கள். இதை ஃபலாஃபல்லுடன் தொட்டுக்கொண்டு சாப்பிடலாம்.
Parsley இலைகள் பெரிய கடைகளில் கிடைக்கும். உலர் இலைகளையும் பயன்படுத்தலாம். Paprika பொடியை நாமே செய்யலாம். சிவப்புக் குடைமிளகாயை மெலிதாக அரிந்து வெயிலில் உலர்த்துங்கள். நன்றாக உலர்ந்ததும் மிக்ஸியில் போட்டுப் பொடித்துக்கொள்ளுங்கள்.
செம்ம ருசி: மணமணக்கும் மட்டன் ஈரல் வறுவல்