

முதன்மை உணவைவிட அதற்குத் தொட்டுக்கொள்ளத் தரப்படும் இணை உணவுக்காகவே பெரும்பாலும் பலர் உணவகங்களைத் தேடிச் செல்வர். வீட்டில் எப்படிச் சமைத்தாலும் அதன் ருசி வருவதில்லை என்று அதற்குக் காரணமும் சொல்வார்கள். வீட்டிலேயே சுவையான ஆலுகோபி செய்யக் கற்றுத் தருகிறார் அ.தேவகி.
என்னென்ன தேவை?
காலிஃபிளவர் - கால் கிலோ
பெரிய வெங்காயம் - 1
தக்காளி - 2
மிளகாய்த் தூள் - 1 டீஸ்பூன்
மல்லித் தூள் - ஒன்றரை டீஸ்பூன்
மஞ்சள் தூள் - அரை ஸ் பூன்.
பட்டை, இஞ்சி - சிறு துண்டு
கிராம்பு - 1
பூண்டு - 3 பல்
மசாலா அரைக்க
தேங்காய்த் துருவல் - 3 டீஸ்பூன்
சோம்பு, சீரகம் - தலா 1 டீஸ்பூன்
மிளகு - 10
எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
எப்படிச் செய்வது?
தேங்காய்த் துருவல், சோம்பு, சீரகம், மிளகு அனைத்தையும் சிறிதளவு தண்ணீர் விட்டு நன்கு அரைத்துக்கொள்ள வேண்டும். வாணலியில் எண்ணெய் ஊற்றி பட்டை, கிராம்பு சேர்த்துத் தாளிக்கவும். அதில் நறுக்கிய வெங்காயம், இஞ்சி - பூண்டு விழுது, தக்காளி சேர்த்து வதக்கி மிளகாய்த் தூள், மல்லித் தூள், மஞ்சள் தூள், உப்பு சேர்த்து வதக்கவும்.
இதனுடன் அரைத்த மசாலாவைச் சேர்த்து நீர் ஊற்றி கொதிக்கவிட வேண்டும். மசாலா வாசனை போகக் கொதித்ததும் சுத்தம் செய்து நறுக்கி கொதிநீரில் போட்டு எடுத்த காலிஃபிளவர் துண்டுகளைச் சேர்த்து வேகவைக்க வேண்டும். கிரேவி பதத்துக்கு வந்ததும் கொத்தமல்லி தூவி இறக்க வேண்டும். இதைச் சப்பாத்திக்குத் தொட்டுக் கொள்ளலாம்.
குறிப்பு: அ.தேவகி