

என்னென்ன தேவை?
தேங்காய் (பெரியது) - 2
பீன்ஸ் - 100 கிராம்
கேரட் - 100 கிராம்
வெங்காயம் - 1 (சிறியது)
பச்சை மிளகாய் - 6
பச்சைப் பட்டாணி - 100 கிராம்
உருளைக் கிழங்கு - 150 கிராம்
எலுமிச்சை - 1
இஞ்சி - சிறிய துண்டு
பாசிப் பருப்பு - 100 கிராம்
மல்லித் தழை - சிறிது
சீரகம், நெய் – தாளிக்க
எப்படிச் செய்வது?
தேங்காயைத் துருவி, பால் எடுத்துக்கொள்ள வேண்டும். மூன்று முறை பால் எடுத்துத் தனித்தனியாக வைத்துக்கொள்ள வேண்டும். காய்கறிகளைச் சிறிய துண்டுகளாக வெட்டி வைத்துக்கொள்ளுங்கள். வாணலியில் எண்ணெய் ஊற்றி, கீறிய மிளகாய், நீளமாக வெட்டிய வெங்காயம் ஆகியவற்றைப் போட்டு வதக்க வேண்டும். சிறிது வதக்கியதும் காய்கறிகளைப் போட்டு வதக்க வேண்டும். சிறிது நேரம் வதக்கி, மூன்றாவது முறையாக எடுத்த பாலை ஊற்றிக் காய்களை வேகவிட வேண்டும்.
காய்கறிகள் பாதி வெந்தபின் இரண்டாம் பாலை ஊற்றி அடுப்பை சிம்மில் வைத்து வேகவிட வேண்டும். பிறகு சிறிது உப்பு போட வேண்டும். காய்கறிகள் நன்றாக வெந்த பின், வேகவைத்த பாசிப் பருப்பையும் உருளைக் கிழங்கையும் சேர்க்க வேண்டும்.
அதன் பின் இஞ்சியைச் சாறு எடுத்து ஊற்ற வேண்டும். பிறகு முதலில் எடுத்த பாலை ஊற்றிக் கொதிக்க விடாமல் நுரைகூடிவந்தபின் மல்லித் தழையைத் தூவி இறக்க வேண்டும்.
வாணலியில் நெய் ஊற்றி, சீரகம் போட்டுத் தாளித்துச் சேர்க்க வேண்டும். கொஞ்சம் சொதியைத் தனியாகக் கரண்டியில் எடுத்து அது ஆறிய பின் எலுமிச்சைச் சாறு கலந்து அதைச் சொதியில் ஊற்றிப் பரிமாறுங்கள்.