

என்னென்ன தேவை?
பச்சரிசி - 1 கப்
வெல்லம் - 1 கப் (தூளாக்கியது)
ஏலக்காய் - சிறிதளவு
நெய்- 2 டீஸ்பூன்
எண்ணெய் – தேவையான அளவு
எப்படிச் செய்வது?
அரிசியை இரண்டு மணிநேரம் ஊறவைத்து, தண்ணீரை வடித்து, துணியில் பரப்பி நிழலில் உலரவிடுங்கள். அரிசியைக் கையால் பிடித்துப் பார்த்தால் கையில் ஒட்டக் கூடாது. அப்போது அரிசியை மிக்ஸியில் மாவாக அரைத்து, சலித்துக்கொள்ளுங்கள். ஒரு கப் அரிசி என்றால் அரை கப் தண்ணீர்; எடுத்துக்கொள்ள வேண்டும். வெல்லத்தை அரை கப் தண்ணீரில் கரைத்து, வடிகட்டிக் கொள்ளுங்கள்.
அடி கனமான பாத்திரத்தில் வெல்லக் கரைசலை ஊற்றி அதில் ஏலப் பொடியைச் சேர்த்து உருட்டுப் பதம் வரும்வரை காய்ச்சுங்கள். தண்ணீரில் விட்டுப் பார்த்தால் பந்து போல் உருளும் பதம் வர வேண்டும். பின் தீயைக் குறைத்து மாவைக் கொஞ்சம் கொஞ்சமாகச் சேர்த்துக் கிளறுங்கள். மாவு சுருண்டு வரும்போது நெய் சேர்த்துக் கிளறி இறக்குங்கள்.
இறக்கிய மாவை வேறு பாத்திரத்துக்கு மாற்றி துணியால் மூடி ஒரு நாள் வையுங்கள். மறு நாள் வாழையிலையில் நெய் தடவி, மாவைச் சிறிது எடுத்து வட்டமாகத் தட்டி, எண்ணெய்யில் போட்டு இருபுறமும் பொன்னிறமாகும் வரை குறைந்த தீயில் வேகவைத்து எடுங்கள். அதை அதிரசக் கட்டையால் லேசாக அழுத்தி எடுத்தால், அதிகப்படியான எண்ணெய் வடிந்துவிடும்.